தேடுதல்

பிலிப்பீன்ஸ் முன்னாள் அரசுத்தலைவர் Aquinoவின் ஆன்மா நிறையமைதி அடைய செபம் பிலிப்பீன்ஸ் முன்னாள் அரசுத்தலைவர் Aquinoவின் ஆன்மா நிறையமைதி அடைய செபம்   (ANSA)

மனித மாண்பு, வாழ்வுக்கு ஆதரவாக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

ஜூன் 24, இவ்வியாழனன்று இறைபதம் அடைந்துள்ள, பிலிப்பீன்ஸ் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் Benigno Aquino அவர்கள், அந்நாட்டில் சனநாயகம் தழைக்க உழைத்தவர் - கத்தோலிக்கத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டின் நீதித்துறையில், மரணதண்டனை நிறைவேற்றும் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு, அந்நாட்டு காங்கிரஸ் அவை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு, அந்நாட்டு ஆயர்கள், தங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடவுளின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மனிதரும் விலையேறப்பெற்றவர்கள், மற்றும், மரணதண்டனையை அமல்படுத்த முயற்சிப்பது, மனிதரின் இன்றியமையாத மாண்பை மீறுவதாக உள்ளது என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் சிறைப்பணிக் குழு வெளியிட்ட செய்தி கூறுகிறது.

ஜூன் 24, இவ்வியாழனன்று, பிலிப்பீன்சில் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதன் 15ம் ஆண்டு நிறைவு கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, செய்தி வெளியிட்ட, தலத்திருஅவையின் சிறைப்பணிக் குழுவின் தலைவர் ஆயர் Joel Baylon அவர்கள், மீட்கப்பட்ட முடியாத மனிதர் என்று எவரும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில், 1987ம் ஆண்டில், முதன் முறையாக மரணதண்டனை சட்டம் இரத்து செய்யப்பட்டது. அச்சமயத்தில், அச்சட்டத்தை இரத்துசெய்த முதல் ஆசிய நாடாகவும், பிலிப்பீன்ஸ் பாராட்டப்பட்டது. ஆயினும், அந்நாட்டில் அச்சட்டம் 1993ம் ஆண்டில் மீண்டும் கொண்டுவரப்பட்டு, 2006ம் ஆண்டில் மீண்டும் இரத்துசெய்யப்பட்டது. பின்னர், 2017ம் ஆண்டில், அச்சட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் வரைவுதொகுப்பு, பிரதிநிதிகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (Fides)

மேலும், ஜூன் 24, இவ்வியாழனன்று, தனது 61வது வயதில், இறைபதம் சேர்ந்துள்ள பிலிப்பீன்ஸ் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் Benigno Aquino அவர்களின் ஆன்மா நிறையமைதி அடைய, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் திருப்பலிகள் நிறைவேற்றி செபித்துள்ளனர்.

“Noynoy” என அழைக்கப்படும் Aquino அவர்கள், பிலிப்பீன்சில் மக்களாட்சியை நிலைநிறுத்த பெரிதும் உழைத்தவர் என்றுரைத்துள்ள ஆயர்கள், அவரது ஆன்மா இறைவனின் இரக்கத்தைப் பெறுமாறு செபித்துள்ளதோடு, அவரின் குடும்பத்தினருக்கு தங்களின் இரங்கலையும் தெரிவித்துள்ளனர். (CNA)

25 June 2021, 15:45