தேடுதல்

மியான்மார் புலம்பெயர்ந்தோர் மியான்மார் புலம்பெயர்ந்தோர் 

மியான்மார் திருஅவை புலம்பெயர்ந்த மக்களுக்கு முன்னுரிமை

கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற, காயா மாநிலத்தின் Loikaw மறைமாவட்டத்தில் மூன்று ஆலயங்கள், இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காயா மாநிலத்தில், இராணுவத்தின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள ஆலயங்களைச் சீரமைப்பதைவிட, புலம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, தலத்திருஅவை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Loikaw மறைமாவட்டத்தில் ஆலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது பற்றி, யூக்கா செய்தியிடம் பேசிய, அம்மறைமாவட்டத்தின் சான்சிலர், அருள்பணி Francis Soe Naing அவர்கள், தலத்திருஅவையின் மறுவாழ்வுப் பணிகளில், மக்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இரண்டாவது கட்டமாக, ஆலயங்களைப் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்படும் என்றுரைத்த அருள்பணி Soe Naing அவர்கள், புலம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, உணவு, குடியிருப்பு, மருந்து போன்றவை உடனடியாகத் தேவைப்படுகின்றன என்று கூறினார்.

அப்பாவி மக்கள் புகலிடம் தேடும் இடங்களாக வழிபாட்டுத் தலங்களும், சமய நிறுவனங்களும் உள்ளன என்றும், அவை பாதுகாக்கப்படவேண்டும் என்றும், மியான்மார் ஆயர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவது பற்றியும், அருள்பணி Soe Naing அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற, காயா மாநிலத்தின் Loikaw மறைமாவட்டத்தில் மூன்று ஆலயங்கள், இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன. மேலும், இவ்வாண்டு மே 23ம் தேதி, இயேசுவின் திரு இருதய ஆலயம் தாக்கப்பட்டதில், நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாண்டு மே 21ம் தேதியிலிருந்து காயா மாநிலத்தில், தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் அடைக்கலம் தேடினர். மேலும், இராணுவம், ஆலயங்கள் மீது குண்டுகளை வீசத்தொடங்கியதையடுத்து மக்கள் காடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, காயா மற்றும், ஷான் மாநிலங்களிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று, ஐ.நா. கூறியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2021, 15:17