தேடுதல்

Vatican News
Mandalayல் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் Mandalayல் இராணுவத்திற்கு எதிராக போராட்டம்  (ANSA)

காயா மாநிலத்தில் மியான்மார் இராணுவத்தின் கடும் தாக்குதல்கள்

மே 31ம் தேதியிலிருந்து, இராணுவம், Loikaw, Demoso ஆகிய நகரங்களில், பீரங்கித் தாக்குதல்களையும், ஹெலிகாப்டர்கள் வழியாக குண்டு வீச்சுக்களையும் பெருமளவில் நடத்தி வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரின் கிழக்கேயுள்ள காயா (Kayah) மாநிலத்தில் இராணுவம் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதையொட்டி, ஏராளமான மக்கள் அப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றனர் என்று, அப்பகுதியின் அருள்பணி Paul Tinreh அவர்கள் பீதேஸ் செய்தியிடம் அறிவித்தார்.

காயா மாநிலத்தின் Loikaw மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி ஒருங்கிணைப்பாளரான அருள்பணி Paul அவர்கள், கரீன் இனத்தவர் பெரும்பான்மையாக வாழ்கின்ற காயா மாநிலத்தில், போராளிகளுக்கு எதிராக, இராணுவம், பல்வேறு முனைகளில் தாக்குதல்களை நடத்திவருகிறது என்று கூறினார்.

இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்கள் என்றும், ஏராளமான மக்கள் அம்மாநிலத்திற்குள்ளே புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் கூறிய அருள்பணி பவுல் அவர்கள், மே 31ம் தேதியிலிருந்து, இராணுவம், Loikaw, Demoso ஆகிய நகரங்களில், பீரங்கித் தாக்குதல்களையும், ஹெலிகாப்டர்கள் வழியாக குண்டு வீச்சுக்களையும் பெருமளவில் நடத்திவருகின்றது என்று கூறினார். 

பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், கிராமங்கள், நகரங்கள் என, எல்லா இடங்களிலும் இராணுவத்தின் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும், மனிதாபிமான உதவிகள் சென்றடையா வண்ணம், இராணுவம் எல்லா சாலைகளையும் அடைத்துவிட்டது என்றும், அருள்பணி பவுல் அவர்கள் கூறியுள்ளார். 

Loikaw மறைமாவட்டத்தில் உள்ள 7 பங்குத்தளங்களில் வாழ்ந்த ஏறத்தாழ 35 ஆயிரம் கத்தோலிக்கரில், ஐந்தாயிரம் கத்தோலிக்க குடும்பங்கள் புலம்பெயர்ந்துள்ளன என்றும், அருள்பணி பவுல் அவர்கள் கூறியுள்ளார் (Fides). 

04 June 2021, 15:40