தேடுதல்

Vatican News
G-7 கூட்டம் நடக்கும் இடத்தின் முன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் G-7 கூட்டம் நடக்கும் இடத்தின் முன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்   (AFP or licensors)

ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன் அகற்றப்பட காரித்தாஸ் விண்ணப்பம்

ஆப்ரிக்க நாடுகள் தனியார்களிடம் வாங்கிய கடனுக்காக ஒவ்வோர் ஆண்டும் திருப்பி வழங்கவேண்டிய பணம், ஆப்ரிக்கா முழுவதற்கும் தடுப்பூசிகள் வாங்குவதற்குத் தேவைப்படும் நிதியைவிட மூன்று மடங்கு அதிகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றினால் வெளிக்கொணரப்பட்டுள்ள சமூக அநீதிகளை முற்றிலுமாக ஒழிப்பது ஒன்றே, வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி என்று அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு, G-7 நாடுகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் ஜூன் 13 இஞ்ஞாயிறு வரை நடைபெறும் மூன்று நாள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் G-7  நாடுகளின் தலைவர்களுக்கு இவ்விண்ணப்பத்தை விடுத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, ஏழை நாடுகளின் கடன்கள் நீக்கப்பட்டு, அப்பணம் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகளுக்கு செலவழிக்க வழிவகை செய்யப்படவேண்டும் என கேட்டுள்ளது.

பிரிட்டன், இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு என பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள், பிரிட்டனின் Cornwall நகரில் சந்தித்துவருவதையொட்டி, அவைகளிடம் இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, ஏழை நாட்டு மக்கள், ஒவ்வோர் ஆண்டும் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை தங்கள் வெளிநாட்டு கடனுக்கான வட்டியாக செலுத்தி வருவதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது.

சாம்பியா நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் 45 விழுக்காடு, வெளிநாட்டுக் கடனைச் செலுத்தவே பயன்படுத்தப்படுகிறது என உரைக்கும் காரித்தாஸ் அமைப்பு, இதனால், தேசிய நலவாழ்வுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படவேண்டிய நிதி குறைவதுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

2021ம் ஆண்டில் மட்டும், ஆப்ரிக்க நாடுகள், தனியார்களிடம் வாங்கிய கடனுக்காக, 2,340 கோடி டாலர்களைத் திருப்பி வழங்கவேண்டியுள்ளது என்பதையும், இத்தொகை ஆப்ரிக்கா முழுவதற்கும் தடுப்பூசிகள் வாங்குவதற்கு தேவைப்படும் நிதியைவிட  மூன்று மடங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

ஏழை நாடுகள் தனியாரிடம் பெற்றிருக்கும் கடன்களை அடைக்க உதவுதல், கோவிட் பெருந்தொற்றால் ஏழை நாடுகள் அனுபவிக்கும் துயர்களை அகற்ற உதவுதல், ஏழை நாடுகளின் கடன்சுமை மேலும் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான உதவிகளை ஆற்றுதல், சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு சுமுகமான தீர்வு காண உறுதியெடுத்து உழைத்தல், என நான்கு விண்ணப்பங்களை G-7 நாடுகளிடம் முன்வைத்துள்ளது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

12 June 2021, 15:37