தேடுதல்

Vatican News
கோவிட் 19 பெருந்தொற்றால் இறந்தவர்களுக்கு அடக்கச் சடங்கு கோவிட் 19 பெருந்தொற்றால் இறந்தவர்களுக்கு அடக்கச் சடங்கு  (AFP or licensors)

பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்துள்ளோரின் நினைவு

மே மாத இறுதிக்குள், இந்தியாவில், 204 அருள்பணியாளர்கள், 212 அருள்சகோதரிகள் மற்றும் மூன்று ஆயர்கள், இப்பெருந்தொற்றின் விளைவாக, இறையடி சேர்ந்துள்ளனர் - "Indian Currents" கணிப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில், குறிப்பாக, இந்த நோயின் இரண்டாம் அலையினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், மக்களுக்கு பணிகள் ஆற்றி, தங்கள் உயிரை வழங்கியுள்ள அருள்பணியாளர்கள், சகோதரர்கள், அருள் சகோதரிகள் ஆகியோரை, இந்தியத் தலத்திருஅவை சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

"Indian Currents" என்ற ஆங்கில இதழில் பணியாற்றிவரும், கப்பூச்சியன் துறவுசபையைச் சேர்ந்த சகோதரர், சுரேஷ் மாத்யூ அவர்கள், தொடர்ந்து பதிவு செய்துவரும் எண்ணிக்கையின்படி, மே மாத இறுதிக்குள், இந்தியாவில், 204 அருள்பணியாளர்கள், 212 அருள் சகோதரிகள் மற்றும் மூன்று ஆயர்கள் இப்பெருந்தொற்றின் விளைவாக, இறையடி சேர்ந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் பணியாற்றி வந்தவர்கள் என்றும், தங்கள் பணியின் தொடர்பாக அவர்களைத் தாக்கிய கோவிட் பெருந்தொற்றிலிருந்து விரைவான மருத்துவ உதவிகள் பெற இயலாத நிலையில் இவர்கள் உயிரிழந்தனர் என்றும் மாத்யூ அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

மறைமாவட்டங்கள் மற்றும் துறவு சபைகளைச் சேர்ந்த 30,000த்திற்கும் அதிகமான அருள்பணியாளர்களையும், பல்வேறு துறவு சபைகளைச் சேர்ந்த 1,03,000 அருள் சகோதரிகளையும் கொண்டுள்ள இந்தியாவில், ஏப்ரல் மே மாதங்களில், இயேசு சபையைச் சேர்ந்த 36 பேரும், அன்னை தெரேசா அவர்களால் உருவாக்கப்பட்ட பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் சபையைச் சேர்ந்த 14 அருள் சகோதரிகளும் இறையடி சேர்ந்துள்ளனர் என்று பீதேஸ் செய்திக்குறிப்பு கூறுகிறது.(Fides)

02 June 2021, 15:02