தேடுதல்

Vatican News
அருள்சகோதரி எல்சி வடக்கக்கெரா அருள்சகோதரி எல்சி வடக்கக்கெரா 

பெருந்தொற்றின் அச்சமின்றி உணவு வழங்கும் அருள்சகோதரி

ஒவ்வொருநாளும், சமைத்த உணவை, 50க்கும் அதிகமான மனநலம் குன்றியோருக்கு வழங்கிவரும் அருள்சகோதரி எல்சி அவர்களை, 'மித்தாப்பூரின் அன்னை தெரேசா' என்று மக்கள் அழைக்கின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறை பராமரிப்பின் புனித அன்னா துறவு சபையைச் சேர்ந்த அருள்சகோதரி எல்சி வடக்கக்கெரா அவர்கள், தன் 83வது வயதிலும், பெருந்தொற்றின் பாதிப்புக்களைப் பற்றி அச்சம் கொள்ளாமல், வறியோருக்கு உணவு வழங்கும் பணியை, தொடர்ந்து ஆற்றிவருகிறார் என்று, UCA செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மறைமாவட்டத்தில், மித்தாப்பூர் என்ற இடத்தில், மனநலம் குன்றியதால் சாலைகளில் விடப்பட்டுள்ள மக்களுக்கென, கடந்த பத்தாண்டுகளாக, அருள்சகோதரி எல்சி அவர்கள், ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வருகிறார்.

ஒவ்வொருநாளும், சமைத்த உணவை, ஓர் ஆட்டோ ரிக்சாவின் உதவியோடு, சாலைகளில் எடுத்துச்சென்று, 50க்கும் அதிகமான மனநலம் குன்றியோருக்கு வழங்கிவரும் அருள்சகோதரி எல்சி அவர்களை, 'மித்தாப்பூரின் அன்னை தெரேசா' என்று மக்கள் அழைக்கின்றனர்.

பெருந்தொற்று உருவாக்கிய முழு அடைப்பு, சமுதாய விலகல், மற்றும் அருள்சகோதரி எல்சி அவர்களின் வயது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இந்தப் பணியை நிறுத்தும்படி மற்றவர்கள் கூறியபோது, தான் இந்தப் பெருந்தொற்றின் தாக்கத்தால் உயிரிழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை, ஆனால், உண்பதற்கு வழியின்றி இருக்கும் மனநலம் அற்றோர், பட்டினியாய் இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார்.

2010ம் ஆண்டு, டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, தான் இந்தப் பணியைத் துவக்கியதாகவும், சென்ற ஆண்டு, கோவிட் பெருந்தொற்றினால் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்தில் சிறிதுகாலம் தடைபட்ட இந்தப் பணி, தற்போது மீண்டும் நடைபெற்று வருவது தனக்கு மனநிறைவைத் தருவதாகவும் அருள்சகோதரி எல்சி அவர்கள் UCA செய்தியிடம் கூறினார். (UCAN)

03 June 2021, 14:59