தேடுதல்

பாகிஸ்தானில் சிறுமிகள் திருமணத்திற்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் சிறுமிகள் திருமணத்திற்கு எதிர்ப்பு 

கட்டாயத் திருமணங்களுக்கு எதிராக கராச்சி தலத்திருஅவை

பாகிஸ்தானில் தேசிய அளவில், ஆண்கள் மற்றும், பெண்களுக்கு, திருமண வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்படவேண்டும் – கராச்சி தலத்திருஅவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெறும் மத மாற்றங்கள், மற்றும், கட்டாயத் திருமணங்கள் ஆகியவை, அந்நாட்டில் திருமண வயது வரம்புக்குக் குறைவாக இருக்கின்ற சிறுமிகளின் வாழ்வில் கடுமையான அச்சுறுத்தல்களை முன்வைத்துள்ளன என்று, அந்நாட்டு தலத்திருஅவை கவலை தெரிவித்துள்ளது.

மத மாற்றங்கள், மற்றும், கட்டாயத் திருமணங்கள் ஆகியவற்றால், பல கிறிஸ்தவ, மற்றும், இந்துக் குடும்பங்கள், தங்களின் பெண் பிள்ளைகளை, ஆரம்பக் கல்விக்குப்பின் தொடர்ந்து கல்வி கற்க, அனுப்புவதை நிறுத்தி விடுகின்றன என்றும், தலத்திருஅவை கூறியுள்ளது.  

பாகிஸ்தானில் கிறிஸ்தவ, மற்றும், இந்துப் பெண்களும், சிறுமிகளும் கடத்தப்படுவது மற்றும், அவர்கள், இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவது குறித்து, கராச்சி உயர்மறைமாவட்டம் நடத்திய கருத்தரங்கில் இவ்வாறு கூறப்பட்டது.

பாகிஸ்தானின் குற்றவியல் தண்டனை சட்டம் எண் 498-bல், கட்டாயத் திருமணங்கள்  விவகாரத்தில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவது இணைக்கப்படவேண்டும் மற்றும், அந்தச் சட்டம், நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று, அந்நாட்டு நீதித்துறை, மற்றும், அரசியல் அதிகாரிகளுக்கு, இக்கருத்தரங்கில், விண்ணப்பம் விடுக்கப்பட்டது.

இஸ்லாம் மத விதிமுறைகளில், மத மாற்றம், மற்றும், திருமணத்திற்கு, வயது வரம்பு குறிக்கப்படாததால், அந்நாட்டில் இடம்பெறும் இப்பிரச்சனைகளில், 12 வயது நிரம்பிய சிறுமிகள் பலர் சிக்கியுள்ளனர் என்று, ஆசியச் செய்தி கூறுகின்றது.

மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய, கராச்சி உயர்மறைமாவட்டத்தின் நீதி மற்றும், அமைதி அவையோடு இணைந்து பணியாற்றும் மனித உரிமை ஆர்வலர் Mariyam Kashif அவர்கள், தேசிய அளவில் ஆண்கள் மற்றும், பெண்களுக்கு, திருமண வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். (AsiaNews)

08 June 2021, 14:52