தேடுதல்

ஏமன் ஏமன்  (WFP/Ammar Bamatraf)

ஜூன் 27ல், மத்தியக் கிழக்குப் பகுதிக்காக இறைவேண்டல்

மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்காக இறைவேண்டல் எழுப்பும் நாளின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அப்பகுதி கிறிஸ்தவர்களோடு காணொளிச் செய்தி வழியாகப் பேசுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து நாடுகளின் திருஅவைகள், ஜூன் 27, இஞ்ஞாயிறன்று, "கிழக்கில் அமைதி நாள்" என்ற ஒரு நாளைச் சிறப்பித்து, அப்பகுதி முழுவதையும், நாசரேத் திருக்குடும்பத்திற்கு அர்ப்பணிக்கும் என்று, அப்பகுதியின் கிறிஸ்தவத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மத்தியக் கிழக்குப் பகுதியின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தையின், நீதி மற்றும், அமைதி பணிக்குழுவின் முயற்சியால், அமைதிக்காக இறைவேண்டல் செய்யும் இந்நாள் உருவாக்கப்பட்டுள்ளது.

'முதலீடுகள் மற்றும், தொழில்' பற்றி, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் எழுதிய, Rerum Novarum திருமடல், வெளியிடப்பட்டதன் 130ம் ஆண்டு நிறைவை கருத்தில்கொண்டு, மத்தியக் கிழக்குப் பகுதிக்காக இறைவேண்டல் எழுப்பும் நாள் ஏற்படுத்தப்பட்டது. இத்திருமடல், 1891ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த அமைதி நாள் குறித்து ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, ஈராக்கின், கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், ஈராக்கில் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் தல ஆயர்கள் திருப்பலி நிறைவேற்றி, வன்முறை, பயங்கரவாதம், மற்றும், இரத்தம் சிந்தும் போர்கள் நிறுத்தப்பட செபிப்பார்கள் என்று எடுத்துரைத்தார்.  

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா அவர்களும், லெபனானின் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை  Beshara al-Rahi அவர்களும், மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதையும், நாசரேத் திருக்குடும்பத்திடம் அர்ப்பணிக்கும் இறைவழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்கள்.

இந்த இறைவேண்டல் நாளின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அப்பகுதி கிறிஸ்தவர்களோடு காணொளிச் செய்தி வழியாகப் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

26 June 2021, 15:12