தேடுதல்

Vatican News
ஈராக் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  ஈராக் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

மத்தியக் கிழக்கின் அமைதிக்காக ஜூன் 27ல் சிறப்பு செபங்கள்

ஈராக்கின் அருள்பணியாளர்களும், துறவியரும், வருகின்ற தேர்தல்களில் எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாகப் பேசக்கூடாது - கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 27ம் தேதி, மத்தியக்கிழக்குப் பகுதியின் அமைதிக்காக, அப்பகுதியின் அனைத்து கத்தோலிக்க முதுபெரும்தந்தையர், சிறப்பு திருவழிபாடுகளை நடத்தவுள்ளவேளை, கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை, அதே நாளில் சிறப்புத் திருப்பலிகளை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளது.

ஜூன் 27ம் தேதி நடைபெறும் திருவழிபாடுகளில், அனைத்து கிறிஸ்தவத் தலைவர்களும், போர் மற்றும், வன்முறையால் சீரழிக்கப்பட்டுள்ள மத்தியக்கிழக்குப் பகுதியை, நாசரேத்து திருக்குடும்பத்தின் பராமரிப்பில் அர்ப்பணிப்பார்கள் என்று ஆசியச் செய்தி கூறியுள்ளது. 

இந்த நிகழ்வு குறித்து, கல்தேயத் திருஅவையின் முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 27ம் தேதியன்று, ஒவ்வோர் ஆயரும், தனது மறைமாவட்டத்தில், திருப்பலி நிறைவேற்றி, இறைவேண்டல் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஈராக்கில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்குப்பின், தலத்திருஅவை வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக் கத்தோலிக்கர் அனைவரும், ஒன்றிணைந்து வாழ்வதன் அடையாளமாக, அவர்கள் தேசிய தனித்துவத்தையும், கிறிஸ்தவ நம்பிக்கையையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளார். 

ஈராக்கில், வருகிற அக்டோபர் மாதத்தில், தேர்தல்கள் நடைபெறுவது பற்றிக் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், அந்நாட்டின் அருள்பணியாளர்களும், துறவியரும், எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாகப் பேசக்கூடாது என்று  கேட்டுக்கொண்டுள்ளார். (AsiaNews)

12 June 2021, 15:25