தேடுதல்

கர்தினால் ரெய்ன்ஹார்டு மார்க்ஸ் கர்தினால் ரெய்ன்ஹார்டு மார்க்ஸ்  

கர்தினால் மார்க்ஸ்: திருத்தந்தையின் மடல் ஊக்கமளிக்கின்றது

மியூனிக் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகத் தொடர்ந்து பணியை ஆற்றுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டதை, கீழ்ப்படிதலின்பேரில், ஏற்றுக்கொள்கிறேன் - கர்தினால் மார்க்ஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜெர்மனியின் மியூனிக் மற்றும், ஃபிரைசிங் உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக சமர்ப்பித்த மடலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த பதில் மடல், தனக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது, மற்றும், திருத்தந்தையின் தீர்மானத்தை ஏற்கிறேன் என்று, கர்தினால் ரெய்ன்ஹார்டு மார்க்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

67 வயது நிரம்பிய கர்தினால் மார்க்ஸ் அவர்கள், இவ்வாண்டு மே மாதம் 21ம் தேதி திருத்தந்தைக்கு எழுதிய பணி விலகல் விண்ணப்பத்தை ஏற்காமல், அப்பணியை தொடர்ந்து ஆற்றுமாறு திருத்தந்தை எழுதியுள்ள பதில் மடலுக்கு, உடனடியாக தனது பணிவான விருப்பத்தைத் தெரிவித்து, கர்தினால் மார்க்ஸ் அவர்கள், அறிக்கை ஒன்றை, தன் உயர்மறைமாவட்ட இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மியூனிக் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக தொடர்ந்து பணியை ஆற்றுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டதை, கீழ்ப்படிதலின்பேரில் ஏற்றுக்கொள்கிறேன் என்றுரைத்துள்ள கர்தினால் மார்க்ஸ் அவர்கள், தலத்திருஅவையில், மாற்றத்திற்கு நேரம் கனிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  

தான் தொடர்ந்து பேராயர் தலைமைப் பணியை ஆற்றவேண்டும் என்ற திருத்தந்தையின் தீர்மானத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் மார்க்ஸ் அவர்கள், திருஅவையின் புதுப்பித்தலுக்கு மேலும் கூடுதலாக ஆற்றவேண்டிய பணிகள் பற்றிச் சிந்திப்பதற்கும் நேரம் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இத்தீர்மானம், தனக்கு மிகப்பெரும் சவால் என்றும், இனிமேலும் வழக்கமான பணித்திட்டங்களோடு தொடர்வது, தனக்கும் மற்றும், உயர்மறைமாவட்டத்திற்கும் நல்லதல்ல என்றும், கர்தினால் மார்க்ஸ் அவர்களின் அறிக்கை கூறுகின்றது.

நற்செய்தியை அறிவித்து அதற்குச் சான்று பகர்வதற்கு, திருஅவை வரலாற்றின் பல தவறுகளை கண்முன்கொண்டு, புதிய பாதைகளைத் தேடவேண்டும் என்று, கர்தினால் மார்க்ஸ் அவர்கள், திருத்தந்தைக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருந்தார்.

கர்தினால் மார்க்ஸ் அவர்கள், திருப்பீடத் தலைமையகத்தின் சீரமைப்புப் பணிகளில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் குழுவில் ஒருவராகவும், வத்திக்கான் பொருளாதார அவையின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2021, 15:32