தேடுதல்

Vatican News

EU ஆயர்கள் நம்பிக்கையோடு தொடர்ந்து பணியாற்ற திருத்தந்தை...

உலகம் என்ற கிராமத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்வரை, ஐரோப்பிய குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க இயலாது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பா மீது கொண்டிருக்கும் அன்பு, மற்றும், EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்த அவரது ஆழமான புரிந்துணர்வு ஆகியவை தன்னைக் கவர்ந்தன என்று, ஐரோப்பிய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

COMECE எனப்படும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், ஜூன் 11, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனியே சந்தித்து கலந்துரையாடியபின், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.

ஐரோப்பிய ஆயர்கள் தங்களது பணிகளை, நம்பிக்கையோடு தொடர்ந்து ஆற்றுவதற்கு திருத்தந்தை ஊக்கமளித்தார் என்றுரைத்த கர்தினால் Hollerich அவர்கள், அனைத்து அரசியல்வாதிகளோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள், ஏழை-செல்வந்தர் என்ற பிரிவினைக்குள் சிக்கிவிடாமல் இருப்பதில் ஆயர்கள் கவனம் செலுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்று கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பூசிகள், அனைவருக்கும் நியாயமான, மற்றும், சமமான முறையில் கிடைப்பதற்கு வழியமைக்கப்படவேண்டும் என்றும், பணக்கார நாடுகளின் அரசியல்வாதிகளும், தலைவர்களும், தடுப்பூசிகளை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் என்றும், திருத்தந்தை வலியுறுத்திக் கூறியதாக, கர்தினால் Hollerich அவர்கள் தெரிவித்தார்.

உலகம் என்ற கிராமத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்வரை, ஐரோப்பிய குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க இயலாது என்பதால், ஐரோப்பா, மற்ற நாடுகளுக்கும் உதவவேண்டும் என்றும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தில், அனைத்து மக்களும் மகிழ்வாக வாழ்வதற்கு ஊக்கமளிக்கும் மனமாற்றம் அவசியம் என்றும், திருத்தந்தை கூறியதாக, கர்தினால் Hollerich அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

12 June 2021, 15:22