தேடுதல்

மியான்மார் இராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு மியான்மார் இராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு  

வன்முறை, மரணம் எனும் கலாச்சாரத்திலிருந்து வெளியே வருவோம்

20ம் நூற்றாண்டில் மட்டும், சர்வாதிகாரிகளாலும், ஏனையவர்களாலும், உலகில், 13 கோடியே 50 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

விரோத மனப்பான்மைகள் இனி வேண்டாம், நாமனைவரும் ஒன்றிணைந்து, வன்முறை, மற்றும் மரணம் எனும் கலாச்சாரத்திலிருந்து ஒன்றிணைந்து வெளியே வருவோம், என மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

விரோத மனப்பான்மையின் விளைவாக ஏற்படும் இரத்தம் சிந்தல்களால், நம் தெருக்கள் நனைவதை தடுத்து, மரணம், வன்முறை என்ற கலாச்சாரத்திலிருந்து வெளியேறி, நாட்டிற்குரிய மகிமையைத் திரும்பப்பெறுவோம், என்று கூறிய கர்தினால் போ அவர்கள், சுதந்திரம், நம்பிக்கை, அமைதி, மற்றும் வளத்தின் பாதையில் மகிழ்வுடன் நடைபோட ஒவ்வொருவரும் முன்வருவோம் என அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி மாதம் முதல் தேதி மியான்மார் இராணுவம் ஆட்சியை பலவந்தமாகக் கைப்பற்றியதிலிருந்து, நாட்டில் பரவிவரும் வன்முறை, மற்றும் மரணக் கலாச்சாரம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட மியான்மார் கர்தினால் போ அவர்கள், வன்முறை என்பது, கடவுளின் செயல் அல்ல, மாறாக, தீயோனின் இந்த செயலையே, பல நூற்றாண்டுகளாக, கொடுங்கோலர்கள் இவ்வுலகில் ஆற்றிவந்துள்ளனர் என்றார்.

கடவுள் மரணத்தைப் படைக்கவில்லை, மற்றும், அவர் வாழ்வின் அழிவில் மகிழ்ச்சிக் கொள்வதில்லை என்று கூறும் சாலமோனின் ஞான நூலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய கர்தினால் போ அவர்கள், 20 ம் நூற்றாண்டில் மட்டும், சர்வாதிகாரிகளாலும், ஏனையவர்களாலும், உலகில், 13 கோடியே 50 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதுபோல், மியான்மாரிலும், தீயோனின் கையாட்களின் வன்முறை தூண்டல்கள் இடம்பெற்றுவருகின்றன என எடுத்துரைத்தார்.

கோவிட் பெருந்தொற்று ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டேயிருக்க, மறுபக்கமோ, மக்கள் போதிய உணவின்மையாலும், மருத்துவ வசதிகளின்மையாலும் துன்புறுவதுடன், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்ற கவலையையம்  வெளியிட்டார் கர்தினால் போ.

29 June 2021, 15:45