தேடுதல்

புர்கினா பாசோவில் தாக்குதல்கள் புர்கினா பாசோவில் தாக்குதல்கள்   (AFP or licensors)

புர்கினா பாசோ தாக்குதல் குறித்து தலத்திருஅவை அதிர்ச்சி

புர்கினோ பாசோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள Solhan கிராமம், அந்நாடு வழியாக, மாலி மற்றும், நைஜர் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வழியாக உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புர்கினா பாசோ நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள Solhan என்ற கிராமத்தில், கடந்த வாரத்தில் குறைந்தது 160 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறித்து, அந்நாட்டு தலத்திருஅவை தன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

சூன் 04, இவ்வெள்ளி, மற்றும், சூன் 05, இச்சனிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் நடந்த இத்தாக்குதல் குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசிய, அந்நாட்டு திருப்பீட தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அந்நாட்டில், இத்தகைய தாக்குதல்கள், 2015ம் ஆண்டுக்குப்பின் இப்போதுதான் முதன்முறையாக இடம்பெற்றுள்ளன என்று கூறினர். 

இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து இதுவரை எதுவும் உறுதியாக கூறமுடியவில்லை, எனினும், அப்பகுதி, புர்கினா பாசோ வழியாக, மாலி மற்றும், நைஜர் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வழியாக இருப்பதால், அவர்கள், அப்பகுதியை, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொணரும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக யூகிக்க முடிகின்றது என்றும், அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், சூன் 06, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், புர்கினா பாசோ நாட்டில் இடம்பெற்றுள்ள இத்தாக்குதல் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்காக அனைவரும் செபிக்குமாறு உருக்கமாக அழைப்பு விடுத்தார்

Solhan என்ற கிராமத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், 7 குழந்தைகள் உட்பட, குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தாக்குதல் நடந்த சூன் 04, இவ்வெள்ளி இரவில், Tadaryat என்ற கிராமத்திலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

புர்கினா பாசோ அரசு, சூன் 07, இத்திங்கள்கிழமையிலிருந்து, 72 மணி நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. (Fides)

08 June 2021, 14:55