தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன், இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் - ஜெனீவா சந்திப்பில்... அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன், இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் - ஜெனீவா சந்திப்பில்... 

உலகின் இரு அரசுத்தலைவர்களுக்கு WCCன் திறந்த மடல்

அமெரிக்க ஐக்கிய நாடும், இரஷ்யாவும், அமைதி, நீதி ஆகியவற்றின் அடிப்படையில், இவ்வுலகை வழிநடத்திச் செல்ல இறைவன் வரமளிக்குமாறு, உலக கிறிஸ்தவ அவை (WCC) இறைவேண்டல் ஒன்றை எழுப்பியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜெனீவாவில், ஜூன் 16, இப்புதன் பிற்பகலில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களும், இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்களும் சந்தித்த நிகழ்வையொட்டி, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ அவை, இவ்விரு தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஒரு திறந்த மடலை வெளியிட்டது.

உலகெங்கும் பணியாற்றும் 350 சபைகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள உலக கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலர், முனைவர் Ioan Sauca அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள இந்த மடலில், இவ்விரு நாடுகளுக்கிடையே தற்போது நிலவும் இறுக்கமானச் சூழலை, இவ்விரு தலைவர்களும் தீர்த்துவைக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதனன்று மாலை 5 மணியளவில் நிறைவுற்ற இவ்விரு அரசுத்தலைவர்களின் சந்திப்பில், கோவிட் 19 பெருந்தொற்றின் சமுதாய, பொருளாதார தாக்கங்கள், சுற்றுச்சூழல் நெருக்கடி, அணு ஆயுத மோதல் என்ற பல தலைப்புக்களில், கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.

உலக அரசுகள், குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் இரஷ்யா ஆகியவை, இதுவரை ஈடுபட்டிருந்த போர், மற்றும் வன்முறை என்ற பாவங்களிலிருந்து விடுதலை பெறவும், அமைதி, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வுலகை வழிநடத்திச் செல்லவும், இறைவன் வரமளிக்குமாறு, உலக கிறிஸ்தவ அவை இம்மடலில் இறைவேண்டல் ஒன்றை எழுப்பியுள்ளது.

ஜெனீவாவின் ஓர் ஏரியின் அருகே அமைந்துள்ள Villa La Grange எனுமிடத்தில், இவ்விரு அரசுத்தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு, இரு கட்டங்களாக, ஏறத்தாழ நான்கு மணி நேரங்கள் நீடித்தது.

இச்சந்திப்பிற்குப்பின், இரு நாடுகளின் அரசுத்தலைவர்களும், செய்தியாளர்களை, தனித்தனியே சந்தித்த வேளையில், தங்கள் சந்திப்பில், ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக கூறினர்.

17 June 2021, 14:44