தேடுதல்

Vatican News
"‘கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக்கொள்கின்றனர்" (திருப்பாடல் 14:1, 53:1) "‘கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக்கொள்கின்றனர்" (திருப்பாடல் 14:1, 53:1) 

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் 14,53 – இறைப்பற்று இல்லார் 1

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை இன்று நாம் சிந்திப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள திருப்பாடல்கள் 14 மற்றும் 53.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல்கள் 14,53 – இறைப்பற்று இல்லார் 1

வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையை, இன்றைய விவிலியத்தேடலில் சிந்திக்க முயல்வோம். 'வாழ்வின் முக்கியப் பிரச்சனை' என்று நான் குறிப்பிட்டதும், நம் உள்ளங்களில் பல்வேறு எண்ணங்கள் எழுந்திருக்க வாய்ப்புண்டு. கோவிட் பெருந்தொற்றினால் உருவாகியுள்ள நலம்சார்ந்த பிரச்சனை, குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சனை, நம் வேலை தொடர்பான பிரச்சனை, நம் பிள்ளைகளின் கல்வி, மற்றும், எதிர்காலம் பற்றிய பிரச்சனை, என்று, பல பிரச்சனைகள், வாழ்வின் முக்கியப் பிரச்சனைகளாக நமக்குத் தோன்றியிருக்கலாம். நாம் இன்று சிந்திக்க வந்திருப்பது, இவை அனைத்தையும்விட முக்கியமான, அடித்தளமான ஒரு பிரச்சனை. அதுதான், கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்சனை.

இவ்வாறு நான் சொன்னதும், நம்மில் பலர், "ஓ, அந்தப் பிரச்சனையா?" என்று சொல்லியிருக்கக்கூடும். "ஓ, அந்தப் பிரச்சனையா?" என்ற அந்தக் கேள்வியில், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் அலட்சியம், கொஞ்சம் சலிப்பு ஆகியவை கலந்திருப்பதை நாம் உணரலாம். வாழ்வில் முக்கியம் என்று நாம் கருதும் பிரச்சனைகள் நடுவே, கடவுள் முதலிடம் வகிக்கவில்லை என்பதை, ஏமாற்றம், அலட்சியம், சலிப்பு ஆகிய உணர்வுகளால் வெளிப்படுத்துகிறோம். கடவுள் நம் வாழ்வில் முதலிடம் வகிக்கவில்லை என்றாலும், நம் எண்ணங்களின் ஏதோ ஒரு மூலையில் அவர் இருக்கிறார் என்பது உண்மை. இந்தப் பெற்றுந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளும், வேதனைகளும் நம்மில் பலருக்கு கடவுளைப்பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதை மறுக்க இயலாது. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? அவர் இருந்தால், என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? போன்ற கேள்விகள், கட்டாயம், நம் வாழ்வில், அவ்வப்போது, அல்லது, அடிக்கடி எழுந்திருக்கும்.

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை இன்று நாம் சிந்திப்பதற்கு ஒரு  முக்கியக் காரணம், இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள திருப்பாடல்கள் 14 மற்றும் 53. ஏறத்தாழ ஒரே சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ்விரு திருப்பாடல்களும் 'இறைப்பற்று இல்லார்' என்று தலைப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இப்பாடல்கள், இறைவன்மீது பற்றின்றி வாழ்வோரைப்பற்றி அல்ல, மாறாக, இறைவன் என்று ஒருவர் இல்லை என்று சொல்வாரைக் குறித்து எழுதப்பட்டுள்ளன. "‘கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக்கொள்கின்றனர்" (திருப்பாடல் 14:1, 53:1) என்ற அறிமுக வரிகளுடன் துவங்கும் இத்திருப்பாடல்கள், நம்மை, ஓர் ஆன்மீகத்தேடலுக்கு அழைக்கின்றன.

'கடவுள் இல்லை' என்ற கூற்றை, அறிவிலிகள் தங்களுக்குள் சொல்லிக்கொள்கின்றனர் என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறியுள்ளது, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. தாவீது வாழ்ந்த காலத்தில், 'கடவுள் இல்லை' என்ற கூற்று, அல்லது, எண்ணம், அவரவர் உள்ளத்தில் இருந்தது, அது வெளியில் பறைசாற்றப்படவில்லை என்ற கருத்து, முதல் வரியிலேயே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஆனால், இன்றைய உலகில், 'கடவுள் இல்லை' என்ற கூற்றை மிக எளிதாக நாம் கேட்கமுடிகிறது. அதுவும், அறிவியலில் பல ஆய்வுகள் செய்துள்ள அறிஞர்கள், 'கடவுள் இல்லை' என்று கூறுவதை, ஒரு பொழுதுபோக்காக, அல்லது, தங்கள் வாழ்வின் முக்கியப்பணியாக செய்துவருவதை நம்மால் காணமுடிகிறது.

'கடவுள் இல்லை' என்ற கடவுள் மறுப்பு நிலை, கடவுளுக்கு எதிராகச் சொல்லப்படும் கூற்றா, அல்லது, மதங்கள் காட்டும் கடவுளுக்கு எதிராகச் சொல்லப்படும் கூற்றா என்பதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றிற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான, ஈ.வே.ரா.பெரியார் அவர்கள், 'கடவுள் இல்லை' என்று முழக்கமிட்டவர் என்பதை வரலாற்றில் காண்கிறோம். அவரது 'கடவுள் இல்லை' முழக்கத்தை இருவேறு வழிகளில் புரிந்துகொள்ளலாம். பெரியார் அவர்கள், ‘கடவுள் என்ற உண்மை இல்லை’ என்பதைக் கூறினாரா, அல்லது, சாதிய வேறுபாடுகளை வலியுறுத்திய பிராமணர்கள் முன்வைத்த ‘அநதக் கடவுள் இல்லை’ என்பதைக் கூறினாரா என்ற விவாதம், இன்றும் தொடர்ந்துவருவதை அறிவோம். பெரியாரின் கடவுள் மறுப்பைக் குறித்து எழுந்துள்ள இந்த இருவேறு கருத்துக்களைப் போலவே, மனித வரலாற்றில், பல்வேறு நாடுகளில், பல்வேறு வடிவங்களில், கடவுள் மறுப்புக் கொள்கைகள் உருவெடுத்தன.

இன்று உலகில் நிலவும் கடவுள் மறுப்பு கொள்கை, உண்மையிலேயே கடவுளை மறுக்கிறதா, அல்லது, அநீதிகளைப் பின்பற்றும் மத அமைப்புக்கள் கூறும் கடவுளை மறுக்கிறதா? என்ற கேள்வியை நாம் சிந்திப்பது பயனுள்ள முயற்சி.

National Geographic என்ற இணைய இதழில், 2016ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், "The World's Newest Major Religion: No Religion", அதாவது, "உலகின் மிகப் புதிதான பெரும் மதம்: மதம் அற்ற நிலை" என்ற தலைப்பில்,  கட்டுரையொன்று வெளியானது. கேப் புல்லார்ட் (Gabe Bullard) என்பவர் எழுதியிருந்த இக்கட்டுரையின் ஆரம்பத்தில், 21ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, பல மதப்பாரம்பரியங்கள், படிப்படியாகக் குறைந்து, மறைந்து வருவதைப் பற்றிய புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.

Time ஆங்கில இதழ், 55 ஆண்டுகளுக்கு முன், 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஓர் அட்டைப்படத்தை வெளியிட்டது. "Is God Dead?", அதாவது, "கடவுள் இறந்துவிட்டாரா?" என்ற கேள்வி, அந்த அட்டைப்படத்தில், பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. 1923ம் ஆண்டு முதல் தன் வாரஇதழை வெளியிட்டுவந்த Time நிறுவனம், தன் அட்டைப்படத்தில், நிகழ்வுகள் அல்லது மனிதர்கள் ஆகியோரை படங்களாக வெளியிட்டன. முதன்முதலாக, 1966ம் ஆண்டு, ஏப்ரல் 6ம் தேதி வெளியிட்ட இதழில், "Is God Dead?" என்ற மூன்று சொற்களை மட்டும் அட்டைப்படத்தில் அச்சிட்டது, இந்த அட்டைப்படம், பலரின் கவனத்தை ஈர்த்ததோடு, பெரும் விவாதங்களையும் எழுப்பியது.

Time இதழ் வெளியிட்ட இந்தக் கேள்வியைப்பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடும் புல்லார்ட் அவர்கள், இன்றும் இந்தக் கேள்வி, நம்மிடையே பலமுறை எழுப்பப்படுகிறது என்று கூறுகிறார். 'கடவுள் இறந்துவிட்டாரா' என்ற கேள்விக்கு, சுருக்கமான 'ஆம்' அல்லது, 'இல்லை' என்ற பதில்கள், நாம் வாழும் காலத்தில் கிடைக்கப்போவதில்லை என்று கூறும் புல்லார்ட் அவர்கள், இந்த Time இதழ் வெளியான ஆண்டுக்குப்பின், கடந்த 50 ஆண்டுகளில் பிறந்து வளர்ந்தவர்களிடம், 'கடவுள் இறந்துவிட்டாரா' என்ற கேள்வியைக் கேட்டால், பதிலுக்கு, 'கடவுளா, அது யார்?' என்ற கேள்வி எழக்கூடும் என்று புல்லார்ட் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளைப்பற்றியும், மதத்தைப்பற்றியும் அக்கறையில்லை என்று சொல்லிக்கொள்ளும் போக்கு, 21ம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் பரவிவரும் அதே வேளையில், கடவுளைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம்கொண்ட இளையோரின் எண்ணிக்கையும் கூடிவருவதை நம்மால் காணமுடிகிறது.

கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்கள், பல ஆண்டுகளாக நம் மத்தியில் வலம்வருவதை அறிவோம். அவற்றில், கடந்த 20 ஆண்டுகளில் வெளிவந்த சில நூல்கள், நாம் மேற்கொண்டுள்ள தேடலுக்கு உதவியாக உள்ளன.

Norman Geisler, Frank Turek என்ற இரு எழுத்தாளர்கள் "I Don't Have Enough Faith to Be an Atheist", அதாவது, "ஒரு கடவுள் மறுப்பாளராக இருக்கத் தேவையான அளவு நம்பிக்கை என்னிடம் இல்லை" என்ற தலைப்பில், 2004ம் ஆண்டு, நூலொன்றை வெளியிட்டனர். இந்நூலின் முதல் பிரிவு, ”Can We Handle the Truth?” அதாவது, "உண்மையை நம்மால் கையாளமுடியுமா?" என்ற கேள்வியை முன்வைக்கிறது. இப்பிரிவு, வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) அவர்களது கூற்றுடன் ஆரம்பமாகிறது. "மனிதர்கள் அவ்வப்போது உண்மையின்மீது மோதி விழுகின்றனர். ஆனால், அவர்களில் பலர், மீண்டும் எழுந்து, ஒன்றும் நிகழாததுபோல், விரைந்து செல்கின்றனர்" (“Men stumble over the truth from time to time, but most pick themselves up and hurry off as if nothing happened”) என்ற கூற்று, உண்மையைச் சந்திக்கும் சக்தி, நாம் வாழும் அவசர உலகில் பலருக்கு இல்லை என்பதைக் கூறுகிறது. உண்மையை நாம் சந்திக்கும்போதும், அதன்மீது மோதும்போதும், உண்மை நம்மை பாதித்துவிடக்கூடாது என்ற பதட்டத்தில், அச்சூழலைவிட்டு விரைவில் வெளியேற முயல்கிறோம் என்று முதல் பிரிவில் கூறும் இந்நூலின் ஆசிரியர்கள், "A Few Good Men" என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியைக் குறிப்பிடுகின்றனர்.

கடற்படையைச் சேர்ந்த ஒரு தளபதி, தனக்குக்கீழ் பணியாற்றிய ஒரு வீரரைக் கொல்வதற்கு, வேறு இரு வீரர்களுக்கு அனுமதி அளித்தார் என்பதை நிரூபணம் செய்யும் ஒரு வழக்கு, இத்திரைப்படத்தின் கருவாக அமைந்துள்ளது. கொல்லப்பட்ட வீரரின் சார்பில் இந்த வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர், நீதிமன்றத்தில், தளபதியை, கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். ஒரு கட்டத்தில், "உண்மையைச் சொல்லுங்கள்" என்று கத்துகிறார், வழக்கறிஞர். அப்போது அந்த தளபதி அவரிடம், "உண்மையை உன்னால் கையாளமுடியாது" என்று பதிலுக்குக் கத்துகிறார்.

"உண்மையை உன்னால் கையாளமுடியாது" என்று அத்தளபதி கூறுவது, 21ம் நூற்றாண்டில் வாழும் பலரை நோக்கி விடுக்கப்படும் ஒரு சவால் என்று இந்நூலின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் முன்வைக்கும் ஒரு விவாதம் நம் கவனத்தை ஈர்க்கிறது. "நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் உண்மை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக, நாம் அன்புசெலுத்தியவர்கள் நம்மிடம் உண்மையாக இருக்கவேண்டும், நமது மருத்துவர்கள் நம் உடல்நலம் பற்றிய உண்மைகளை நேரடியாகச் சொல்லவேண்டும், நமக்குக் கீழ் பணியாற்றுவோர், நமக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்கள், அரசில் பணியாற்றுவோர் எல்லாரும் உண்மை பேசவேண்டும். நாம் காணும் செய்திகள், நாம் வாங்கும் பொருள்களில் எழுதப்பட்டுள்ள விவரங்கள், எல்லாவற்றிலும் உண்மை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆனால், வாழ்வில், மிக முக்கியமாக விளங்கும் மதம் சார்ந்த, அல்லது நன்னெறி சார்ந்த விடயங்களில் உண்மையைச் சந்திக்க மறுக்கிறோம். அதற்கும் மேலாக, மதம் உண்மையாக இருக்கமுடியாது என்று, நாமாகவே, எவ்வித ஆதாரமும் இன்றி முடிவெடுக்கிறோம்” என்று Norman Geisler, Frank Turek என்ற ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

நம் வாழ்வின் அடித்தளமாக விளங்கும் கடவுள் என்ற உண்மையைச் சந்திக்க மறுக்கும் மனிதர்களைக் குறித்து, 14, மற்றும் 53ம் திருப்பாடல்களில் கூறப்பட்டுள்ள எண்ணங்களில், நம் தேடல் பயணம், அடுத்தவாரம் தொடரும்.

29 June 2021, 15:59