தேடுதல்

Vatican News
அநீதியாக கொலையுண்டவர்களின் அடையாளமாக... அநீதியாக கொலையுண்டவர்களின் அடையாளமாக... 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 10 – நீதிக்காக வேண்டல் 2

நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்; மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்தமாட்டார். (தி.பா. 10:18)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 10 – நீதிக்காக வேண்டல் 2

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் ஹெரால்ட் குஷ்னர் (Harold Kushner) என்ற யூத மத குரு, பொருள்நிறைந்த நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். நம் விவிலியத் தேடல்களிலும், ஞாயிறு சிந்தனைகளிலும் இவரது நூல்களைப்பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளோம். சிறப்பாக, 23ம் திருப்பாடலில் நாம் தேடலை மேற்கொண்ட வேளையில், குஷ்னர் அவர்கள் எழுதிய “The Lord Is My Shepherd: Healing Wisdom of the 23rd Psalm” அதாவது, “ஆண்டவரே என் ஆயர்: 23ம் திருப்பாடலின் குணமளிக்கும் ஞானம்” என்ற நூலையும், யோபு நூலை மையப்படுத்தி நாம் மேற்கொண்ட தேடல்களில், “The Book of Job: When Bad Things Happened to a Good Person”, அதாவது, “யோபு நூல்: நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது” என்ற நூலையும் பெருமளவு பயன்படுத்தியுள்ளோம்.

குஷ்னர் அவர்களை, புகழ்பெற்ற எழுத்தாளராக உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது, 1981ம் ஆண்டு, அவர் எழுதிய "When Bad Things Happen to Good People" அதாவது, "நல்லவர்களுக்குப் பொல்லாதவை நிகழும்போது" என்ற முதல் நூல். இவ்வுலகில் பிறக்கும் இரண்டு கோடி குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தாக்கக்கூடிய Progeria, அதாவது, சிறு வயதிலேயே முதுமை அடைந்துவிடும் அரியதொரு நோயால் தன் மகன் ஆரோன் மிகவும் துன்புற்று, தன் 14வது வயதில் இறந்தபோது, அந்தப் பேரிழப்பு உருவாக்கிய வேதனைக்கு, அர்த்தம் காணும் ஒரு முயற்சியாக, குஷ்னர் அவர்கள் இந்நூலை எழுதினார்.

தனிப்பட்ட ஒருவரையோ, சமுதாயத்தையோ, துன்பங்கள் தாக்கும்போது, அதுவும், தெளிவான காரணங்கள் ஏதுமின்றி, துன்பங்கள் நம்மை வந்தடையும்போது, குஷ்னர் அவர்கள் எழுதிய இந்நூலின் தாக்கம் கூடுதலாக இருந்துவருகிறது. 2001ம் ஆண்டு, நியூ யார்க் நகரில், உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட வேளையிலும், தற்போது, இவ்வுலகை, கோவிட் பெருந்தொற்று தாக்கிவரும் வேளையிலும், "நல்லவர்களுக்குப் பொல்லாதவை நிகழும்போது" என்ற இந்நூலை, மக்கள் அதிகமாகத் தேடியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்நூல் வெளிவந்த சில மாதங்கள் சென்று, குஷ்னர் அவர்களின் நண்பர்கள் சிலர், அவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தனர். "நல்லவர்களுக்குப் பொல்லாதவை நிகழும்போது" என்பதைச் சிந்தித்த குஷ்னர் அவர்கள், அதன் எதிர்வாதமாக, "பொல்லாதவர்களுக்கு நல்லவை நிகழும்போது" - "When Good Things Happen to Bad People" என்பதையும் ஒரு நூலாக எழுதவேண்டும் என்பதே, நண்பர்களின் வேண்டுகோள்.

குஷ்னர் அவர்கள், தன் நண்பர்கள் சொன்ன ஆலோசனையைப் பின்பற்றி அத்தகைய நூலை எழுதவில்லை. ஆனால், மார்ட்டின் லெவின்சன் (Martin Levinson) என்ற எழுத்தாளர், "When Good Things Happen to Bad People" அதாவது, 'பொல்லாதவர்களுக்கு நல்லவை நிகழும்போது' என்ற தலைப்பில், 2009ம் ஆண்டு, நூலொன்றை வெளியிட்டார். உலக வரலாற்றில், பல்வேறு குற்றங்களையும், கொடுமைகளையும் செய்தவர்களைப்பற்றி லெவின்சன் அவர்கள், இந்நூலில் கூறியுள்ளார்.

'பொல்லாதவர்களுக்கு நல்லவை நிகழும்போது' என்ற இந்நூலில், உரோமையப் பேரரசன் நீரோவில் துவங்கி, ஜெஞ்ஜிஸ் கான், ஜோசப் ஸ்டாலின், இடி அமின், ஒசாமா பின் லாடன் ஆகியோர் உட்பட, 50 பேரைப்பற்றிய குறிப்புக்கள், பதிவாகியுள்ளன. தங்களைத் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற துணிவில், இவர்கள் செய்த அநீதிகள், இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தனை அநீதிகளையும் செய்தவர்கள், வசதியாக, வளமாக வாழ்ந்ததைக் காணும் யாருக்கும், 'பொல்லாதவர்களுக்கு நல்லவை நிகழ்கிறதே' என்ற அங்கலாய்ப்பு ஏற்படுவது இயற்கை. இந்த நெருடலுக்குப் பதில்கூறும் வண்ணம், லெவின்சன் அவர்கள் இந்நூலை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

18ம் நூற்றாண்டில், அயர்லாந்தில் வாழ்ந்த அரசியல்வாதியும், பொருளாதார, மெய்யியல் சிந்தனையாளருமான, எட்மண்ட் புர்கே (Edmund Burke) அவர்கள், "பொல்லாதவர்கள் வெற்றி பெறுவதற்கு, நல்லவர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே முக்கிய காரணம்" என்று கூறியுள்ளதை, லெவின்சன் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பொல்லாதவர்கள் வெற்றிபெறுவதுபோல் தோன்றும் வேளையில், மனசாட்சியுள்ள நல்லவர்கள், அதற்கு எதிராக குரல் எழுப்பலாம். அல்லது, அவர்களுக்குத் தகுந்த பதிலை, இறைவன் வழங்கவேண்டும் என்று அவரிடம் குரல் எழுப்பலாம். நாம் தற்போது சிந்தித்துவரும் 10ம் திருப்பாடலில், அத்தகைய ஒரு முயற்சியை, மன்னர் தாவீது மேற்கொண்டுள்ளார்.

18 இறைவாக்கியங்களைக் கொண்ட 10ம் திருப்பாடல், நீதிக்காக வேண்டல் என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும், இப்பாடலில், பொல்லார் செய்யும் குற்றங்களும், கொடுமைகளும், முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒரு கோணத்தில் பார்க்கும்போது, தாவீது இங்கு பட்டியலிட்டுள்ளவை, எந்தெந்த வழிகளில் தீங்கிழைக்கலாம் என்று, பொல்லாருக்கு சொல்லித்தரும் ஒரு வழிகாட்டியோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

10ம் திருப்பாடலில், 'பொல்லார்' என்ற சொல், ஆறு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 'பொல்லார்' கூட்டத்தில், 'பேராசையுடையோர்', 'தீயோர்' ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.. இந்தக் கூட்டத்தினரின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்களைப்பற்றி பேசும் தாவீது, அவர்களை, 'எளியோர்' என்ற சொல்லால், ஐந்து முறை குறிப்பிட்டுள்ளார். எளியோருடன், 'சூதறியாதவர்கள்', திக்கற்றவர்கள்', 'ஏழைகள்', 'அனாதைகள்' 'ஒடுக்கப்பட்டோர்' என்று, வேறு பலரையும் இணைத்து அவர்கள் சார்பில் இறைவனிடம் மன்றாடுகிறார், தாவீது.

இத்திருப்பாடலின் 18 இறைவாக்கியங்களில், முதல் இறைவாக்கியம், ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்? (தி.பா. 10:1) என்ற கேள்வியோடு துவங்குகிறது. இதைத்தொடர்ந்து, பொல்லார், எளியோரை, எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை, தாவீது, அடுத்த 10 இறைவாக்கியங்களில் கூறியுள்ளார். இத்தகைய நீதியற்றச் சூழலில், இறைவன் எவ்வாறெல்லாம் செயலாற்றுவார் என்று அடுத்த 4 இறைவாக்கியங்களில் கூறும் தாவீது, நம்பிக்கை கொண்டோருக்கு ஆண்டவர் வழங்கும் அருளை, இறுதி மூன்று இறைவாக்கியங்களில் அறிக்கையிட்டு, இப்பாடலை நிறைவு செய்கிறார்.

பொல்லார் தினமும் செய்துவரும் தீமைகளைக் காணும்போது, "இவர்களால் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது? இவர்களுக்கு, மனசாட்சியே கிடையாதா?" என்ற கேள்விகள் நமக்குள் எழுவதை உணரலாம். இத்தகைய எண்ணங்கள் தாவீதின், உள்ளத்திலும் கட்டாயம் எழுந்திருக்கும். அதற்கு பதில் சொல்லும்வண்ணம், பொல்லார் செய்யும் தீமைகளையும், அவற்றை, அவர்கள், தங்கள் இறுமாப்பினால், தீய நாட்டங்களால், செருக்கினால் செய்கின்றனர் என்பதையும் இணைத்து, தாவீது, தன் குற்றப்பட்டியலை இறைவன் முன் சமர்ப்பிக்கிறார்.

இந்தக் குற்றப்பட்டியலில், பதுங்கியிருந்து பாயும் ஒரு சிங்கத்தை, தாவீது, ஓர் உருவகமாக பயன்படுத்தியிருப்பது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது: ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்; சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்; திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர். குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்; எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்; தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச்செல்கின்றனர். (தி.பா. 10:8-9)

எந்த ஒரு விலங்கும், பசியெடுக்கும் வேளையில், தன் தேவையை நிறைவு செய்வதற்காக மட்டுமே, ஏனைய விலங்குகளை வேட்டையாடுகின்றது. ஆனால், பணம், பதவி என்ற தீராத பசியெடுத்து திரியும் பொல்லாதவர்களோ, எளியோரை வேட்டையாடுவதை ஒரு பொழுதுபோக்காக கொண்டிருப்பதை, நாம் இன்றைய உலகில் காண்கிறோம். நம்மை தற்போது வதைத்துவரும் கோவிட்-19 என்ற பெருந்தொற்றுகூட, அரசியல்வாதிகள் மற்றும், வர்த்தகர்களின் அடங்காத சுயநலப் பசியால் உருவான கொடுமை என்ற கருத்தும் பலமுறை பேசப்பட்டு வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, கடவுள் இல்லை என்ற எண்ணமும், அப்படியே, எங்கோ ஒரு மூலையில் அவர் இருந்தாலும், அவர் தங்களைக் காணமாட்டார் என்ற எண்ணமும், பொல்லார் செய்யும் தீமைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன என்பது, 10ம் திருப்பாடலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்; அவர்கள் எண்ணமெல்லாம் “கடவுள் இல்லை! எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே. ‘எவராலும் என்னை அசைக்க முடியாது; எந்தத் தலைமுறையிலும் எனக்குக் கேடுவராது’ என்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர். ‘இறைவன் மறந்துவிட்டார்; தம் முகத்தை மூடிக்கொண்டார்; என்றுமே எம்மைப் பார்க்கமாட்டார்’ என்று பொல்லார் தமக்குள் சொல்லிக் கொள்கின்றனர். (தி.பா. 10:4,5அ,6,11)

ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்? (தி.பா. 10:1) என்ற வேதனை நிறைந்த கேள்விகளுடன் துவங்கிய 10ம் திருப்பாடலில், பொல்லாரின் தீமைகளும், அதற்குப் பின்புலத்தில் அவர்கள் எண்ணிவரும் தவறான சிந்தனைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், இத்திருப்பாடலின் ஆசிரியர், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு பதிவு செய்துள்ள எண்ணங்கள், இத்திருப்பாடலின் நடுவிலும், இறுதியிலும் இவ்வாறு ஒலிக்கின்றன:

ஆண்டவரே, எழுந்தருளும்! இறைவா, உமது ஆற்றலை வெளிப்படுத்தும்! எளியோரை மறந்துவிடாதேயும். ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை நீர் நிறைவேற்றுகின்றீர்; அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர். நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்; மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்தமாட்டார். (தி.பா. 10:12,17-18)

08 June 2021, 14:06