தேடுதல்

மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Bechara Boutros Al-Rai மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Bechara Boutros Al-Rai 

திருஅவை மக்களோடு இணைந்து நடக்கிறது என்ற நம்பிக்கை

லெபனான் பணத்தின் மதிப்பு 90 விழுக்காடுவரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், உணவும் மருத்துவ உபகரணங்களும் இறக்குமதியாளர்கள் பிடியில் இருப்பதாகவும் கவலை தெரிவித்த கர்தினால் ராய்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஜூலை மாதம் முதல் தேதி இடம்பெற உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்புக்கூட்டத்திற்கு தயாரிப்பாகவும், சமுதாய, பொருளாதார, மற்றும் நிதி நெருக்கடிகளைகள் குறித்தும், திருவழிபாடு, அருள்பணியாளர் பயிற்சி இல்லங்கள், அருள்பணியாளர் பயிற்சி ஆகியவை குறித்து கலந்துரையாடவும் லெபனான் நாட்டின் மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை, ஆயர் மன்றக் கூட்டத்தை நடத்திவருகிறது.

லெபனான், மற்றும் அரபு நாடுகளில் பணியாற்றும் ஏறத்தாழ 40 ஆயர்கள், இம்மாதம் 14 முதல் 19 வரை,  லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கலந்துகொள்ளும் ஆயர் மன்ற ஆண்டு கூட்டத்தில், வெளிநாடுகளிலுள்ள மாரனைட் மறைமாவட்டங்களின் நிலைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயர் மன்றக்கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றிய மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Bechara Boutros Al-Rai அவர்கள், மாரனைட் திருஅவை, மக்களோடு இணைந்து நடக்கிறது என்ற நம்பிக்கையை வழங்கவேண்டியதன் தேவை குறித்தும், ஒருமைப்பாட்டின் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.

லெபனான் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவுப் பாதுகாப்பின்றி வாழ்வதாக தன் துவக்க உரையில் கவலையை வெளியிட்ட கர்தினால் ராய் அவர்கள், புலம்பெயர்வோரின் துன்ப நிலை, குறிப்பாக, இளையோர் நாட்டைவிட்டு வெளியேற முனைதல் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார்.

லெபனான் பணத்தின் மதிப்பு 90 விழுக்காடுவரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், உணவும் மருத்துவ உபகரணங்களும் இறக்குமதியாளர்கள் பிடியில் இருப்பதாகவும், அடிப்படை மருத்துவ உதவிகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும் கவலையை வெளியிட்டார் கர்தினால் ராய்.

திருத்தந்தையின் அழைப்பின் பேரில் லெபனான் நாட்டின் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜூலை 1ம் தேதியின் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்திற்கு தயாரிப்பாகவும்,  லெபனான் ஆயர்களின் தற்போதைய கூட்டம் இடம்பெற்று வருகிறது. (AsiaNews)

17 June 2021, 14:41