தேடுதல்

Vatican News
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா  (AFP or licensors)

மீண்டும் கல்வாரி மலைமீது ஏற்றப்பட்டுள்ள சிரியா மக்கள்

சிரியா நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், அந்நாட்டு மக்களை, மீண்டும் கல்வாரி மலைமீது ஏற்றியுள்ளன - மாரனைட் வழிபாட்டுமுறை பேராயர் சமீர் நாசர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியா நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், அந்நாட்டு மக்களை, மீண்டும் கல்வாரி மலைமீது ஏற்றியுள்ளன என்று, மாரனைட் வழிபாட்டுமுறை பேராயர் சமீர் நாசர் (Samir Nassar) அவர்கள், தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ACN என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிடம் கூறினார்.

உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டுவரும் மக்கள், தற்போது, வறுமை என்ற மாபெரும் போரினால் பெரிதும் பாதிக்கபப்ட்டுள்ளனர் என்று கூறிய தமஸ்கு உயர் மறைமாவட்ட பேராயரான நாசர் அவர்கள், பொருளாதாரத் தடைகளால் உணவுப்பொருள்களின் விலை பலமடங்கு கூடியுள்ளது என்றும், இதனால், வறியோர் பெரும் கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

உள்நாட்டுப்போர் துவங்குவதற்கு முன் இருந்த உணவுப்பொருள்களின் விலையைக் காட்டிலும், தற்போது, பத்து மடங்கிற்கும் அதிகமான விலையை மக்கள் தரவேண்டியுள்ளது என்றும், அரசு வழங்கும் நியாய விலை உணவுப்பொருள்களைப் பெறுவதற்கு, மக்கள் ஒரு நாள் முழுவதும் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது என்றும், பேராயர் நாசர் அவர்கள் வேதனையுடன் கூறினார்.

இதுவரை உள்நாட்டுப் போரினால், 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை இழந்துள்ள சிரியாவின் மீது, தற்போது, பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், கூடுதலான மக்களை, வறுமை, பட்டினி ஆகிய கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றன என்று, பேராயர் நாசர் அவர்கள் கூறினார்.

சிரியாவின் அரசைத் தண்டிக்கும் நோக்கத்துடன், பிற நாடுகள் சுமத்தும் பொருளாதாரத் தடைகள், அரசை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்றும், இத்தடைகளின் முழு பாதிப்பையும், குடிமக்களே அடையவேண்டியுள்ளது என்றும், அலெப்போவில் பணியாற்றும், மெல்கித்திய கிரேக்க கத்தோலிக்க பேராயர் Jean-Clément Jeanbart அவர்கள், ACN அமைப்பிடம், ஏற்கனவே கூறியிருந்தார் என்று, ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

சிரியா நாட்டில் உதவிகள் செய்துவரும் ACN அமைப்பு, மிகவும் வறுமைப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வயது முதிர்ந்தோர் ஆகியோரை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு, உணவு, மருந்துகள் மற்றும் இல்லங்களில் மின்சக்தி வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளது.(ACN/ICN)

02 June 2021, 15:18