தேடுதல்

Vatican News
மகிழ்வு நிறை குடும்பம் மகிழ்வு நிறை குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: குடும்ப மகிழ்வின் இரகசியம்

குடும்பங்கள், தங்களின் சான்று வாழ்வால், மற்றவரிடம் இயேசு பற்றிப் பேசுகின்றன. கடவுள் மீது பற்றார்வத்தைத் தூண்டுகின்றன. நற்செய்தி மற்றும், அதன் வாழ்வுமுறையின் அழகையும் அவை பிரதிபலிக்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், “கனிநிறைப் பண்பை விரிவாக்குதல்” என்ற தலைப்பில், ஒரு குடும்பத்திற்கு உண்மையிலேயே மகிழ்வை அளிக்கும் இரகசியம் எது என்பது குறித்து 183, மற்றும், 184ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள கருத்துக்கள் இதோ:

அன்பின் சக்தியை அனுபவிக்கும் திருமணமான தம்பதியர், அந்த அன்பு, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவரின் காயங்களைக் கட்டவும், சந்திப்புக் கலாச்சாரத்தைப் பேணிவளர்க்கவும், நீதிக்காகப் போராடவும், அழைப்பு விடுக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றனர். இந்த உலகை, இல்லச்சூழலில் அமைக்கின்ற, மற்றும், ஒவ்வொரு மனிதரையும், உடன்பிறந்தோராக நோக்கி, அவர்களுக்கு உதவுகின்ற பணியை, கடவுள், குடும்பத்திற்குக் கொடுத்திருக்கிறார். ஆனால் இக்கால மனிதரின் தினசரி வாழ்க்கையை கவனமுடன் நாம் நோக்குகையில், ஒரு நலமான குடும்ப உணர்வு, சமுதாய மற்றும், அரசியல் நிலைகள் உட்பட, எல்லாவற்றிலுமே, அதிகமாகவே தேவைப்படுவதைக் காணமுடிகின்றது. ஆயினும், நற்செய்தி அறிவுரையின்படி வாழமுயற்சிக்கும் குடும்பங்கள், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்.25:40) என்ற இயேசுவின் திருச்சொற்களை மனதில் இருத்துகின்றனர். இக்குடும்பங்கள், தங்கள் வாழ்வால், பின்வரும் இயேசுவின் அறிவுரைக்கும் சான்றாக உள்ளன. “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர்“ (லூக்.14:12-14). இதுவே ஒரு குடும்பத்தின் மகிழ்வின் இரகசியம். குடும்பங்கள், தங்களின், சொல், செயல் ஆகியவற்றின் சான்று வாழ்வால், மற்றவரிடம் இயேசு பற்றிப் பேசுகின்றன, மற்றும், தங்களின் நம்பிக்கையை மற்றவருக்கு வழங்கி, கடவுள் மீது பற்றார்வத்தைத் தூண்டுகின்றன. நற்செய்தி மற்றும், அதன் வாழ்வுமுறையின் அழகையும் அவை பிரதிபலிக்கின்றன. இவ்வாறு, உடன்பிறந்த உணர்வு, சமுதாய அக்கறை, வலுவற்றவர் சார்பாக வெளிப்படையான பேச்சு, சுடர்வீசும் நம்பிக்கை, எதிர்நோக்கில் துடிப்பு ஆகியவற்றுக்குச் சான்றாக வாழ்வதன் வழியாக, கிறிஸ்தவ திருமணங்கள், சமுதாயத்தில், எண்ணற்ற வழிகளில், கடவுளன்பின் இருப்பை உணர்த்துகின்றன.

24 June 2021, 14:09