தேடுதல்

கருவில் குழந்தையைப் பேணிவரும் பெண்ணுக்காக திருத்தந்தையின் வேண்டுதல் கருவில் குழந்தையைப் பேணிவரும் பெண்ணுக்காக திருத்தந்தையின் வேண்டுதல்  (Vatican Media)

மகிழ்வின் மந்திரம் : அன்பும், கருவுற்றிருக்கும் காலமும்

கருவுற்றிருக்கும் காலம், கடினமான, ஆனால், அற்புதமான காலம். இறைவனோடு இணைந்து, ஒரு புதிய உயிரைக் கொணரும் புதுமையில் தாயும் இணைகிறார். - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “அன்பு, கனிகள் நிறைந்து திகழ” (Love Made Fruitful) என்ற தலைப்பில் எழுதியுள்ள ஐந்தாம் பிரிவில், ஒரு புதிய உயிரை வரவேற்பது, என்ற பகுதியில் பெண்கள், கருவுற்றிருக்கும் காலத்தையும் அன்பையும் இணைத்து, பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம்.

"கருவுற்றிருக்கும் காலம், கடினமான, ஆனால், அற்புதமான காலம். இறைவனோடு இணைந்து, ஒரு புதிய உயிரைக் கொணரும் புதுமையில் தாயும் இணைகிறார். ஒவ்வொரு குழந்தை பிறப்பின் போதும், ஒவ்வொரு பெண்ணும் படைப்பின் மறைப்பொருளில் பங்குபெறுகின்றார். 'என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!' (தி.பா. 139:13) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியுள்ளார். தாயின் கருவில் வளரும் ஒவ்வொரு குழந்தையும், கடவுளின் நித்திய அன்புத் திட்டத்தில் ஒரு பகுதி: 'தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்' (எரேமியா 1:5). ஒவ்வொரு குழந்தையும், இறைவனின் இதயத்தில் நித்தியத்திற்கும் ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறார். ஒரு குழந்தை கருவுற்றதும், படைப்பவரின் நித்திய கனவு நனவாகிறது. கருவுற்ற நேரம் முதல் அவ்வுயிரின் பெரும் மாண்பை நாம் ஒவ்வொவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெறும் வெளித்தோற்றங்களைத் தாண்டி காணக்கூடிய கடவுளின் கண்களைக் கொண்டு இந்த உண்மையை நாம் காணவேண்டும்" (168)

குழந்தையை, கருவில் பேணிவரும் பெண், தன் குழந்தையைப்பற்றி கனவு காண்பதன் வழியே, கடவுளின் திட்டத்தில் பங்குபெறுகிறார். ‘ஒவ்வொரு அன்னையும், தந்தையும் தங்கள் குழந்தையைக் குறித்து, ஒன்பது மாதங்கள் கனவு காண்கின்றனர்... கனவுகள் இன்றி குடும்பம் இருக்க இயலாது. கனவு காணும் திறமையை ஒரு குடும்பம் இழந்தால், அங்கு, குழந்தைகள் வளர்வதில்லை, அன்பு வளர்வதில்லை, வாழ்வு, காய்ந்து, கருகி இறந்துவிடுகிறது’" (திருத்தந்தை பிரான்சிஸ் - மணிலாவில் குடும்பங்களின் சந்திப்பு - 2015) (அன்பின் மகிழ்வு 168, 169)

15 June 2021, 14:56