தேடுதல்

பிறரது துயர் கண்டு, இயேசு பரிவுகொண்டார் (காண்க. மாற்கு 6:34) பிறரது துயர் கண்டு, இயேசு பரிவுகொண்டார் (காண்க. மாற்கு 6:34) 

மகிழ்வின் மந்திரம் : 'உணர்வுகளின் உலகம்'

குடும்பவாழ்வில், உணர்வுகள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதை, 'உணர்வுகளின் உலகம்' என்ற பகுதியில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

"இவ்வுலகில் பேரழகாகவும், மிகச்சிறந்த்தாகவும் உள்ளவற்றை, கண்ணால் காணமுடியாது, தொட்டும் உணரமுடியாது. உள்ளத்தால் மட்டுமே அவற்றை உணரமுடியும்" என்று சொன்னவர், ஹெலன் கெல்லர். பார்க்கும் திறன், கேட்கும் திறன், பேசும் திறன் மூன்றையும் இழந்தபோதும், உள்ளத்து உணர்வுகளின் உதவியால், வாழ்வில் சாதனைகள் புரிந்த கெல்லர் அவர்கள், உணர்வுகளுக்கு உள்ள சக்தியைப்பற்றி கூறியிருப்பது, சிந்திக்கத்தக்கது.

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'குடும்பவாழ்வில் அன்பு' என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்களில், குடும்பவாழ்வில், உணர்வுகள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதை, 'உணர்வுகளின் உலகம்' என்ற பகுதியில் சுட்டிக்காட்டியுள்ளார். 4 பத்திகள் (143-146) கொண்ட இப்பகுதியில், முதல் இரு பத்திகளில், திருத்தந்தை பதிவுசெய்துள்ள எண்ணங்களின் சுருக்கம் இதோ:

"நம்மை ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் என்று முன்னோர் கூறியுள்ள 'ஆசைகள், உணர்ச்சிகள்' ஆகியவை, திருமண வாழ்வில் முக்கிய இடம் வகிக்கின்றன. மற்றொருவர் நம் வாழ்வில் பிரசன்னமாகி, பங்கு பெறுகிறார் என்ற நிலை, நம்மில், உணர்வுகளை விழித்தெழச் செய்கிறது. உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இது பொதுவானது. இன்பம் அல்லது துன்பம், மகிழ்வு அல்லது துயரம், பரிவு அல்லது அச்சம் என்ற அடையாளங்களில் இது வெளிப்படுகிறது. (143)

உண்மையான மனிதராக, இயேசு, உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். எருசலேமில் தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை அறிந்த இயேசு அழுதார் (காண்க. லூக்கா 19:41). பிறரது துயர் கண்டு, இயேசு பரிவுகொண்டார் (காண்க. மாற்கு 6:34). தன் நண்பரின் மரணத்தால் அவர் கண்ணீர் சிந்தினார் (காண்க. யோவான் 11:35). இயேசு கொண்டிருந்த மென்மையான உள்ளத்தையும், அது, எவ்வளவுதூரம் அடுத்தவருக்காகத் திறந்திருந்தது என்பதையும், இந்த எடுத்துக்காட்டுகள் உணர்த்துகின்றன.” (அன்பின் மகிழ்வு 143, 144)

01 June 2021, 13:53