தேடுதல்

ஒருவருக்கொருவர் துணையாகும் தம்பதியர் ஒருவருக்கொருவர் துணையாகும் தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : "அன்பின் உருமாற்றம்"

தீர்க்க முடியாத பிரச்சனைகளின்போதும், தம்பதியர், தாங்கள் தொடர்ந்து இணைந்து வாழவும், பகிரவும், தொடர்ந்து அன்புகூரவும், மன்னிக்கவும் உறுதி எடுக்கின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவினை,"அன்பின் உருமாற்றம்" என்ற தலைப்பில் இரண்டு பத்திகளை எடுத்துரைத்து நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த இரு பத்திகளில் அவர் பகிர்ந்துள்ள சிந்தனைத் தொகுப்பின் சுருக்கம் இதோ:

மனித ஆயுள்காலம் நீண்டுவருவதன் விளைவாக, நெருங்கிய உறவுகளும், 40, 50, ஏன், சிலவேளைகளில் 60 ஆண்டுகள் கூட  நீடிக்கவல்லவை என்பது மட்டுமல்ல, துவக்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படவேண்டும் என்பதையும் உணரவைக்கிறது. தம்பதியரில் ஒருவருக்கு மிக நெருக்கமான பாலியல் உறவில், ஆர்வம் குறைந்து வந்தாலும், அவர்கள் தனியாக இல்லை, ஒருவருக்கொருவர் துணையாக உள்ளார்கள், வாழ்விலே அனைத்தையும் பகிர்கிறார்கள் என்பதில் கிட்டும் இன்பம், மகிழ்வு இன்னும் தொடர்கிறது. வாழ்வுப் பயணத்தில் இன்பத்தையும் துன்பத்தையும் பகிரும் நபர்களாக தம்பதியர் தங்களுள், ஒருவர் ஒருவருக்கு உள்ளனர். இது தாம்பத்திய அன்பில் கிட்டும் பாசத்தின் ஒரு பகுதி. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பு, உணர்ச்சிகளையும், உணர்வுகளையும், மனநிலையையும் தாண்டியது, ஒருவேளை இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். இந்த ஆழமான அன்பு, வாழ்வு முழுவதும் தொடரும் இதயத்தின் தீர்மானம். தீர்க்கமுடியாத பிரச்சனைகளின்போதும், தம்பதியர், தாங்கள் தொடர்ந்து இணைந்து வாழவும், பகிரவும், தொடர்ந்து அனபுக்கூரவும், மன்னிக்கவும் உறுதி எடுக்கின்றனர். இருவரும் இணைந்து தங்கள் உள்மன நிலைகளில் வளரும் இந்தப் பாதையில், ஒவ்வொரு அடியையும் இவர்கள் மகிழ்வோடு நடக்கின்றனர்.(அன்பின் மகிழ்வு 163)

திருமண உறவு பயணத்தின்போது, நம் வெளிப்புறத்தோற்றங்கள் மாறலாம், ஆனால் அது நம் திருமண அன்பையும் அங்கு நிலவும் ஈர்ப்பையும் குறைத்துவிடும் என்ற அர்த்தமில்லை. நாம் ஒருவரை திருமணத்தில் அன்புகூர்வது, அவரின் உடலுக்காக அல்ல, மாறாக அவரை அவருக்காக முழுமையில் அன்புகூர்கிறோம். உடல் வயதானாலும், நம்மை முதலில் கவர்ந்த அவரின் தனித்தன்மை இன்னும் வெளிப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. பிறர் அதை காணத்தவறினாலும், தம்பதியர்களுக்கிடையே அது அவர்களால் உற்றுநோக்கப்பட்டு, நெருக்கம் அதிகரிக்கிறது. திருமண உறவு என்பது, காலம் செல்லச் செல்ல, தன்னை புதிய வழிகளில் வெளிப்படுத்தி, தன்னைப் பலப்படுத்தும் புதிய வழிகளைக் கண்டுகொள்கிறது. இது, தூய ஆவியாரிடம் நாம் செபிப்பதன் வழியாக இயலக்கூடியதாகின்றது. ஒவ்வொரு புதியச் சுழலுக்கும் ஏற்ப நம் அன்பை உருமாற்றுவதற்கு தேவையான ஆன்மீக நெருப்பையும், ஆன்மீக வல்லமையையும் பெற உதவும் அருளுக்காக தூய ஆவியாரை நோக்கி மன்றாடுவோம். (அன்பின் மகிழ்வு 164)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2021, 13:42