தேடுதல்

Vatican News
தாய், தந்தையுடன் அர்மினிய இளைஞர் தாய், தந்தையுடன் அர்மினிய இளைஞர்   (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் - பிள்ளைகளின் வளர்ச்சியில் தந்தை

தந்தையரின் இருப்பு, குழந்தைகளால் உணரப்படவேண்டும். 'இருப்பு' எனும்போது, அது 'கட்டுப்படுத்துவதை'க் குறிக்கவில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பிள்ளைகளின் வளர்ச்சியில், தாய், தந்தை ஆகியோர் வழங்கும் அன்பின் முக்கியத்துவம் குறித்து ஆறு பத்திகளில் (172-177) விளக்கியுள்ளார். முதல் 3 பத்திகளில் அன்னையின் அன்பு குறித்து விளக்கியுள்ள திருத்தந்தை, இறுதி மூன்று பத்திகளில் (175,176,177), தந்தையின் அன்பு குறித்து விளக்கியுள்ளதன் சுருக்கம் இதோ:

ஒரு குழந்தை, தன் வாழ்க்கையின் வரம்புகளை உணரவும், பரந்த உலகின் சவால்களைச் சந்திக்கவும், கடின உழைப்பு மற்றும் கடுமையான முயற்சியின் அவசியத்தைக் கண்டுகொள்ளவும் ஒரு தந்தை உதவுகிறார். ஒரு தந்தை, ஓர் அக்கறையுள்ள தாயைப் போலவே,  தனது மனைவியிடம் பாசத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு குடும்பத்தின் உறுதியான சூழ்நிலைகளைப் பொருத்து, பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளில் ஒரு சில சமரசங்கள் இருக்கக்கூடும். ஆனால், பெண் மற்றும் ஆண் ஆகிய இரு நபர்களின் தெளிவான, மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட இருப்பு, குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமான சூழலை உருவாக்குகிறது. இன்றோ, “தந்தையர் இல்லாத சமூகம்” என்பதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். தந்தையர் குடும்பத்தில் இல்லாதிருப்பது, முதலில், ஒரு விடுதலையாகக் கருதப்பட்டது. ஏனெனில், தந்தையை, தங்கள் விடுதலை மற்றும் சுயாட்சிக்கு ஒரு தடையாக நோக்கினர் இளையோர். சில வீடுகளில், சர்வாதிகாரம், ஒரு காலத்தில் ஆட்சி செய்தது, சில சமயங்களில், ஒடுக்குமுறை கூட.

மேலும், தந்தையர் பெரும்பாலும் தங்கள் வேலையில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், சில சமயங்களில், தங்கள் சுயநலத்தால், குடும்பங்களை புறக்கணிக்கின்றனர். அவர்கள், சிறியவர்களையும், இளையோரையும் அவர்கள் போக்கிற்கு விட்டுவிடுகின்றனர். எனவே, தங்கள் குழந்தைகளுக்கு உறுதியான வழிகாட்டுதல்களை வழங்கத் தவறிவிடுகின்றனர். பெற்றோர், மற்றும் குழந்தைகளின் பாத்திரங்களை மாற்றியமைப்பது ஆரோக்கியமற்றது. ஏனெனில், இது குழந்தைகள் பெறவேண்டிய வளர்ச்சியின் சரியான செயல்முறையைத் தடுக்கிறது. மேலும், இது முதிர்ச்சியடையத் தேவையான அன்பையும் வழிகாட்டலையும் மறுக்கிறது.

கடவுள், தந்தையை குடும்பத்தில் அமைக்கிறார். அவர், தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்து, மகிழ்ச்சி, துன்பம், நம்பிக்கை, துயர் என அனைத்தையும் பகிர்கிறார். குழந்தைகளோடும் அருகே இருந்து, அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்குபெற்று, அவர்கள் தவறான பாதையில் செல்லும்போது, அவர்களை நெறிப்படுத்தி, சரியான பாதைக்குத் திரும்புவதற்கு உதவவேண்டும். தந்தையரின் இருப்பு, குழந்தைகளால் உணரப்படவேண்டும்.  'இருப்பு' எனும்போது, அது 'கட்டுப்படுத்துவதை'க் குறிக்கவில்லை. ஏனெனில், அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவது என்பது, வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். சில தந்தையர்கள், தாங்கள் பயனற்றவர்கள், அல்லது தேவையற்றவர்கள், என உணரக்கூடும். ஆனால், குழந்தைகள், சில பிரச்சனைகளுடன் வீடு திரும்பும்போது, தங்களுக்காக காத்திருக்கும் ஒரு தந்தையை எதிர்பார்க்கின்றனர். குழந்தைகளுக்கு தந்தை தேவை, தந்தையின்றி வளர்வது, அவர்களுக்கு நல்லதல்ல. (அன்பின் மகிழ்வு 175-177)

18 June 2021, 10:41