தேடுதல்

இரு அன்னையர் தங்கள் குழந்தைகளுடன் இரு அன்னையர் தங்கள் குழந்தைகளுடன்  (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் : பெற்றோரின் அன்பு வழியாக இறைத்தந்தையின் அன்ப

ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்காக காத்திருக்கும் இறைவன், அவர்களை எவ்வித முன்நிபந்தனையுமின்றி சுதந்திரமாக ஏற்றுக்கொள்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “அன்பு, கனிகள் நிறைந்து திகழ” என்ற தலைப்பில் வழங்கியுள்ள ஐந்தாம் பிரிவில், கருவுற்றிருக்கும் காலத்தையும் அன்பையும் இணைத்து, 170, மற்றும் 171ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

கருவிலிருக்கும் ஒரு குழந்தையின் முடியின் நிறம், அது, பிற்காலத்தில் என்னென்ன நோய்க்குள்ளாகும் வாய்ப்புள்ளது போன்றவை பற்றி,  அதன் மரபணுவில் காணப்படும் கூறுகளைக்கொண்டு அறிந்துகொள்ள, இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் வழி செய்கின்றன. இருப்பினும், ஒரு குழந்தையின் தனித்தன்மையையும், மதிப்பையும் குறித்து இறைத்தந்தையே அறிவார். கருத்தாங்கியிருக்கும் அன்னையர்களும், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை, முழு உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ளும் ஞானத்தை இறைவனிடமிருந்து பெற செபிக்கட்டும். ஒவ்வொரு குழந்தையும், ஒரு கொடை, அதன் மதிப்பு கணக்கிட முடியாதது. ஒவ்வொரு குழந்தையும் தனிச் சிறப்புடையது, மற்றும் வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாதது. அக்குழந்தைகள், நம் கனவுகளை நிறைவேற்ற உள்ளவர்கள் நம்மைப்போல் இருக்கிறார்கள், நம்மைப்போல் சிந்திக்கிறார்கள், அல்லது, அழகாக இருக்கிறார்கள் என்பதற்காகவோ, அவர்கள் அன்புகூரப்படவில்லை, மாறாக, அவர்கள் குழந்தைகள் என்பதற்காகவே, அவர்களை நாம் அன்புகூர்கிறோம்.  பெற்றோரின் அன்பு வழியாக இறைத்தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்காக காத்திருக்கும் இறைவன், அவர்களை எவ்வித முன்நிபந்தனையுமின்றி சுதந்திரமாக ஏற்றுக்கொள்கிறார் (அன்பின் மகிழ்வு 170)

கருத்தாங்கியிருக்கும் அனைத்து அன்னையர்களையும் நோக்கி நான் கேட்கிறேன், உங்கள் தாய்மையின் மகிழ்வை எதுவும் பறித்துக்கொள்ள அனுமதியாதீர்கள். உங்களின் மகிழ்வு உங்களின் குழந்தைக்குத் தேவை. இவ்வுலகிற்கு ஒரு குழந்தையை கொணரும் உங்கள் மகிழ்வை, உங்கள் அச்சங்களும் கவலைகளும் குறைக்க அனுமதியாதீர்கள். உங்கள் குழந்தையின் வருகைக்காக உங்களைத் தயாரிக்கும்வேளையில், "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்" (லூக்.1:46-48) என, மரியன்னையுடன் இணைந்து மகிழ்வோம். இறைவனின் துணையுடன் நம் மகிழ்ச்சியைக் காப்பாற்றி, நம் குழந்தைகளுக்கு வழங்குவோம். (அன்பின் மகிழ்வு 171)

16 June 2021, 13:04