தேடுதல்

தத்தெடுத்துள்ள குடும்பம் தத்தெடுத்துள்ள குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: தத்தெடுப்பது, ஓர் அன்புச் செயல்

அன்னையரால் புறக்கணிக்கப்படும் குழந்தைகளைத் தத்தெடுக்கும் சட்ட வழிமுறைகளை எளிதாக்குவது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வது, கருக்கலைப்பு, மற்றும், குழந்தைகள் கைவிடப்படும் நிலைகளைத் தடுக்க உதவும் (அன்பின் மகிழ்வு 179)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “கனிநிறைப் பண்பை விரிவாக்குதல் (An expanding fruitfulness)” என்ற தலைப்பில், 178, 179, மற்றும், 180ம் பத்திகளில், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஊக்குவித்துள்ளார். தத்தெடுப்பது குறித்த திருத்தந்தையின் எண்ணப் பதிவுகள் இதோ... பிள்ளைப்பேறு மீது ஓர் ஆழமான ஆசை இருந்தாலும், சில தம்பதியருக்கு அந்தப் பேறு கிட்டுவதில்லை. இந்நிலை அவர்களுக்கு உண்மையிலேயே துன்பத்தைத் தருகின்றது. ஆனால், திருமணம், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல. பிள்ளைகளைப் பெற்றெடுக்காத நிலையிலும், திருமணம், அதன் மதிப்பையும், முறிவுபடாத்தன்மையையும் இழப்பதில்லை. அதுபோல, தாய்மையும், பிள்ளைகளைப் பெறுவதில் மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளில் அது வெளிப்படுத்தப்படுகின்றது. (அன்பின் மகிழ்வு 178). குழந்தைகளைத் தத்தெடுப்பது, பெற்றோராய் மாறுவதற்கு, ஒரு மிகச் சிறந்த வழியாகும். எனவே குழந்தைகளைப் பெற இயலாத பெற்றோர், சரியான குடும்பச் சூழல் கிடைக்காத பிள்ளைகளைத் தத்தெடுத்து, தங்களின் திருமண அன்பை விரிவடையச் செய்யுமாறு ஊக்கப்படுத்துகிறேன். கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு, குடும்பம் என்ற கொடையை வழங்குவது, ஓர் அன்புச் செயல். எனவே, அன்னையரால் புறக்கணிக்கப்படும் குழந்தைகளைத் தத்தெடுக்கும் சட்ட வழிமுறைகளை எளிதாக்குவது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வது, கருக்கலைப்பு, மற்றும், குழந்தைகள் கைவிடப்படும் நிலைகளைத் தடுக்க உதவும். எவ்வித நிபந்தனையுமின்றி, ஒருவரை தத்தெடுத்து வளர்க்கும் சவாலை ஏற்பது, கடவுளன்பின் வாய்க்காலாக மாறுகிறது. ஏனெனில், “உன் தாய் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்” (எசா.49:15) என்று கடவுள் கூறுகிறார் (அன்பின் மகிழ்வு 179). தத்தெடுக்கத் தீர்மானிப்பதும், அவ்வாறு எடுத்த குழந்தையைப் பேணி வளர்ப்பதும், திருமண அனுபவத்தின் கனிகளை, சிறப்பான முறையில் வெளிப்படுத்துகின்றது. எனவே, ஒரு குழந்தை, சவால்கள் நிறைந்த சூழலில் வளர்க்கப்படுவது, பெற்றோர் தன்மையின் முக்கியமான அம்சத்தை வெளிப்படுத்துகின்றது. தங்களுக்குப் பிறக்கின்ற, அல்லது தத்து எடுக்கப்படுகின்ற குழந்தைகள், ஏற்கப்படவும், அன்புகூரப்படவும், பராமரிக்கப்படவும் உரிமையைக் கொண்டுள்ள மனிதர்கள் என்பதை, இத்தகைய பெற்றோர், மற்றவருக்கு உணர்த்துகின்றனர். அதேநேரம், சிறார், நாடுகளுக்கிடையேயும், கண்டங்களுக்கிடையேயும் வர்த்தகம் செய்யப்படுவது, சரியான சட்டங்கள், மற்றும், நாடுகளின் கட்டுப்பாடுகள் வழியாக தடைசெய்யப்படவேண்டும் (அன்பின் மகிழ்வு 180)

21 June 2021, 14:00