தேடுதல்

Vatican News
கோவிட்-19 காலத்தில் அன்னையர் கோவிட்-19 காலத்தில் அன்னையர்  (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம்: அன்னையரின் அர்ப்பணத்திற்கு திருத்தந்தை நன்றி

அன்னையர் இல்லாத ஒரு சமுதாயம், மனிதத்தை இழந்ததாக இருக்கும். ஏனெனில், இக்கட்டான காலங்களில்கூட, அன்னையர், எப்போதும், கனிவு, அர்ப்பணிப்பு போன்ற நற்பண்புகளை வெளிப்படுத்துகின்றனர் (அன்பின் மகிழ்வு 174)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், பிள்ளைகளின் வளர்ச்சியில், “ஓர் அன்னை, மற்றும், ஒரு தந்தையின் அன்பின்” முக்கியத்துவம் பற்றி, ஆறு பத்திகளில் (172-177) விளக்கியுள்ளார். அவற்றில் அன்னையின் அன்பு (172-175a) பற்றி திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்:

குழந்தைகள் பிறந்தபின், பெயர்சூட்டப்படுதல் முதல், எல்லா வழிகளிலும் அவைகளுக்குக் கிடைக்கின்ற அனைத்து அன்புநிறைந்த பராமரிப்புகள், தாங்கள் அன்புகூரப்படுகின்றோம் என்பதை அவர்கள் உணரவைக்கின்றன. இந்த பராமரிப்புக்களில் மனித உறவின் அழகையும், மற்றவரின் தனித்தன்மையையும், அவர்கள் ஏற்கத் தொடங்குகின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும், ஒரு தந்தை மற்றும், ஓர் அன்னையின் அன்பைப் பெறுவதற்கு உரிமை உள்ளது. இது, குழந்தையின் ஒருங்கிணைந்த, மற்றும், நல்லிணக்க வளர்ச்சிக்கு தேவையானதும் ஆகும். ஒரு கணவனும் மனைவியும், தந்தையும் அன்னையுமாக, படைத்தவராம் கடவுளின் அன்போடு ஒத்துழைக்கின்றனர். ஒருவகையில், அவர்கள், அவரது அன்புக்கு விளக்கம் கொடுக்கின்றவர்களாகவும் உள்ளனர். அவர்கள் ஆண்டவரின், தாய்மை மற்றும், தந்தைமை முகத்தை, தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுகின்றனர். அநாதையாக உள்ளோம் என்ற உணர்வு, இக்காலத்தில், பல சிறாரையும் இளையோரையும் நாம் நினைப்பதைவிட மிக அதிகமாகப் பாதிக்கின்றது. கல்வி கற்க, திறமைகளை வளர்த்துக்கொள்ள, மற்றும், தனிப்பட்ட இலக்குகளைக் கொண்டிருக்க, பெண்களுக்கு இருக்கின்ற நியாயமான ஆசைகளை நாம் ஏற்கின்றோம். அதேநேரம், குழந்தைகளுக்கு, குறிப்பாக, அவர்கள் வாழ்வின் தொடக்க மாதங்களில் அவர்களுக்கு ஓர் அன்னையின் இருப்பு தேவை என்பதையும் நாம் புறக்கணிக்க முடியாது. ஒரு பெண், ஓர் ஆணின் முன்பாக, ஓர் அன்னையாக, அதாவது, புதிய மனித வாழ்வைக் கருத்தாங்கி, பெற்றெடுத்து அதை உலகுக்கு வழங்கும் ஒருவராக, நிற்கிறார். இந்த தாய்மையின் பிரசன்னம், பெண்மைக் குணங்களோடு  பலவீனப்படும்போது, அது நம் உலகுக்கு ஆபத்தை முன்வைக்கிறது. நான் பெண்ணியத்தை நிச்சயமாக மதிக்கிறேன். ஆனால் அது, தாய்மையைப் புறக்கணிப்பதில்லை. அன்னையர் இல்லாத ஒரு சமுதாயம், மனிதத்தை இழந்ததாக இருக்கும். ஏனெனில், இக்கட்டான காலங்களில்கூட, அன்னையர், எப்போதும், கனிவு, அர்ப்பணிப்பு போன்ற நற்பண்புகளை வெளிப்படுத்துகின்றனர். அன்னையரே, தங்கள் பிள்ளைகளுக்கு பக்தியைக் கற்றுக்கொடுக்கின்றனர். அன்னையரின்றி, நம்பிக்கையாளர்கள் புதிதாக உருவாக முடியாது. தங்கள் பிள்ளைகளை, கனிவோடும் பரிவன்போடும் பராமரிக்கும் அன்னையர், உலகம் நல்லது மற்றும், அது வரவேற்பளிக்கும் இடம் என்ற நம்பிக்கையிலும் அனுபவத்திலும், அவர்கள் வளர உதவுகின்றனர். இது, பிள்ளைகள், தன்மதிப்பு, நெருங்கிய உறவு, மற்றும், .மற்றவரின் உணர்வைப் புரிந்து செயல்படும் திறமை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. அன்பு அன்னையரே, நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நிலைக்கும், திருஅவைக்கும் உலகத்திற்கும் வழங்கும் அனைத்திற்கும் நன்றி.

 

17 June 2021, 14:46