தேடுதல்

சீனாவில் அன்னையர் சீனாவில் அன்னையர்   (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம்: அன்பு எப்போதும் வாழ்வை வழங்குகிறது

பெரிய குடும்பங்கள் திருஅவையின் மகிழ்வாகும். அவை, அன்பின் கனிகளின் வெளிப்பாடாகும். (அன்பின் மகிழ்வு 167)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “கனிநிறை வாழ்வளிக்கும் அன்பு (Love Made Fruitful)” என்ற ஐந்தாம் பிரிவில், ஒன்பது துணைத்தலைப்புக்களோடு (165-198) தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார். அந்தப் பிரிவில், 165, 166, மற்றும், 167ம் பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள்..

அன்பு எப்போதும் வாழ்வை வழங்குகிறது. தாம்பத்திய அன்பு, தம்பதியரோடு முடிந்துவிடுவதில்லை... தம்பதியர், ஒருவர் ஒருவருக்கு தங்களையே வழங்கும் அன்பின் உயிருள்ள பிரதிபலிப்பாகவும், அவர்களது தாம்பத்திய ஒன்றிப்பின், நிரந்தர அடையாளமாகவும் பிள்ளைகள் உள்ளனர். 

புதிய வாழ்வை வரவேற்றல்

குடும்பம், ஒரு புதிய வாழ்வு பிறப்பதை மட்டுமல்ல, அந்த வாழ்வை கடவுளின் ஒரு கொடையாக வரவேற்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதிய வாழ்வும், நம்மை எப்போதும் வியக்க வைக்கின்றது, மற்றும், அது தம்பதியரின் அன்பை, கொடையாகப் பாராட்டுகின்றது. குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே அன்புகூரப்படுகின்றனர். கடவுளும்,  தம் பிள்ளைகள் அன்புகூரத் தகுதியுள்ளவர்களாக, எதையும் ஆற்றுவதற்கு முன்னரே, அவர்களை அன்புகூர்கிறார். ஆயினும், பல குழந்தைகள், தங்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே புறக்கணிக்கப்படுகின்றனர், கைவிடப்படுகின்றனர், மற்றும், அவர்களின் குழந்தைப்பருவமும், வருங்காலமும் திருடப்படுகின்றன. இது வெட்கத்துக்குரியது. வயதுவந்தோரின் தவறுகளுக்காக நாம் சிறாரைத் தண்டித்துக்கொண்டு, மனித உரிமைகள் மற்றும், சிறாரின் உரிமைகள் குறித்து, எவ்வாறு நாம் ஆடம்பரமாக அறிக்கையிடமுடியும்? ஒரு குழந்தை இவ்வுலகத்தில் விரும்பப்படாத சூழல்களில் பிறந்தாலும், பெற்றோரும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும், அக்குழந்தையை கடவுளின் கொடையாக ஏற்பவதற்கு, இயலக்கூடிய அனைத்தையும் ஆற்றவேண்டும். மேலும், அக்குழந்தையை திறந்தமனதோடும் பாசத்தோடும் ஏற்கும் பொறுப்பு உள்ளது என்பதையும் அவர்கள் உணரவேண்டும். ஒரு புதிய குழந்தையை, ஒரு தந்தை மற்றும், ஒரு தாயிடம் ஆண்டவர் கொடையாக ஒப்படைப்பது, அதை அவர்கள் ஏற்று, வாழ்வுமுழுவதும் தொடர்ந்து பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவே. ஒவ்வொரு மனிதரின் இறுதி இலக்கு பற்றி நாம் தியானிக்கையில், பெற்றோர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட விலைமதியாத கொடையைப் பாதுகாக்கவேண்டும் என்பதை அதிகமதிகமாக உணரவேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பெயரைத் தேர்வுசெய்ய கடவுள் அனுமதிக்கிறார். அந்தப் பெயராலேயே அவர் அந்தக் குழந்தையை நித்தியத்திற்கும் அழைப்பார். பெரிய குடும்பங்கள் திருஅவையின் மகிழ்வாகும். அவை, அன்பின் கனிகளின் வெளிப்பாடாகும். அதேநேரம், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், தம்பதியரின் கடமை பற்றி இவ்வாறு விளக்கியுள்ளார். பெற்றோராய் இருப்பது என்பது, வரையறையற்று பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, அல்லது, பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் உள்ள நிலை பற்றி உணராதிருப்பது என்ற அர்த்தம் அல்ல, மாறாக, சமுதாய மற்றும், மக்கள்தொகையையும்,  தங்களின் சூழல் மற்றும், நியாயமான ஆசைகளையும் கருத்தில்கொண்டு, ஞானத்தோடும் பொறுப்புணர்வோடும், தம்பதியர், தங்களுக்குரிய இன்றியமையாத சுதந்திரத்தைப் பயன்படுத்தவேண்டும். (அன்பின் மகிழ்வு 165,166, 167)

14 June 2021, 15:38