தேடுதல்

Vatican News
கோவிட்19 ஆல் துன்புறும் மனைவிக்கு உதவும் கணவர் கோவிட்19 ஆல் துன்புறும் மனைவிக்கு உதவும் கணவர் 

மகிழ்வின் மந்திரம்: தம்பதியரின் சான்று வாழ்வின் முக்கியத்துவம்

இக்காலத்தில் நிலவிவரும் உலகப்போக்கு, தம்பதியர், வாழ்வு முழுவதும் ஒன்றித்திருப்பதன் மதிப்பை மங்கச் செய்வதால், திருமண அன்பின் நேர்முக அம்சங்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும் (அன்பின் மகிழ்வு 162)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் நான்காம் பிரிவில், “திருமணமும் கன்னிமையும்” என்ற தலைப்பின்கீழ் 160,161, மற்றும், 162ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம்....

திருமணமான ஒருவர், நற்செய்தி அறிவுரைகளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதன் வழியாக, அவர் பிறரன்பின் உச்சநிலையை அனுபவிக்கலாம். கன்னிமையின் மதிப்பு, மற்றவர் தனக்கு மட்டுமே உடைமையானவர் என செயல்படத் தேவையில்லை என்று, ஒருவர் உணர்வதில் உள்ளடங்கியுள்ளது. இவ்வாறு அது இறையாட்சியின் சுதந்திரத்தைப் பிரதிபலிக்கின்றது. திருமண அன்பு, ஒருபுறம், மூவொரு இறைவனில் நிலவும் முழுமையான ஒன்றிப்பைப் பிரதிபலிக்கின்றது. குடும்பமும், கிறிஸ்துவின் அடையாளமாக உள்ளது. தம் பிறப்பு, மரணம் மற்றும், உயிர்ப்பின் வழியாக, மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கின்ற கடவுளின் அருகாமையை அது வெளிப்படுத்துகின்றது. தம்பதியர், “ஒரே சதையாக” மாறுவது, அவர்கள், தங்களின் இறப்புவரை ஒருவர் ஒருவரோடு, எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதற்கு விருப்பமாக இருப்பதன் அடையாளமாக உள்ளது. இவ்வாறு, கன்னிமை, உயிர்த்த கிறிஸ்துவின் “இறுதிக்காலத்தின்” ஓர் அடையாளமாக உள்ளவேளை, திருமணம், இவ்வுலகத்தில் வாழ்வதன் “வரலாற்று” அடையாளமாக நமக்கு இருக்கின்றது. அது, நமக்காக தம் குருதியையே சிந்தும் அளவுக்கு, தம்மையே கையளித்த கிறிஸ்துவின் அடையாளமாக உள்ளது. ஆக, கன்னிமையும், திருமணமும், அன்புகூர்வதன் பல்வேறு முறைகளைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் மனிதர் அன்பின்றி வாழ இயலாது. அவருக்கு அன்பு வழங்கப்படவில்லையெனில், அவரது வாழ்வு அர்த்தமற்றதாக இருக்கும்.  கன்னிமை, வசதியாக, சுதந்திரமாக, சுயவிருப்பப்படி தனித்து வாழும் ஆபத்தாகவும் மாறலாம். அத்தகைய நிலைகளில், தம்பதியரின் சான்று வாழ்வு, எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். தங்களில் ஒருவர் உடலளவில்  கவர்ச்சியற்றவராக, அல்லது, அடுத்தவரின் தேவைகளை திருப்திப்படுத்த இயலாதவராக மாறினாலும், தம்பதியர் பலர், தங்களின் திருமண உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாக இருக்கின்றனர். இதில், நம் சமுதாயம் கொடுக்கும் ஊக்கமற்ற குரலுக்கு அவர்கள் செவிமடுப்பதில்லை. ஒரு மனைவி, தனது நோயாளி கணவரைப் பராமரிக்கும்போது,  அவர், திருச்சிலுவைக்கு நெருக்கமாக இருந்து, இறப்புவரை அன்புகூர்வேன் என்று திருமணத்தில் கொடுத்த வாக்குறுதியைப் புதுப்பிக்கிறார். இத்தகைய அன்பில், அன்புகூர்பவரின் மாண்பு உண்மையிலேயே சுடர்விடுகின்றது. இது, அன்புகூரப்படுவதைவிட அன்புகூர அழைக்கும் மேலான பிறரன்பாக உள்ளது. பிள்ளைகள் துன்பம் தருகின்றவர்களாகவும், நன்றிமறந்தவர்களாகவும் இருக்கும்போதுகூட, பல குடும்பங்கள், தன்னலமற்ற அன்புப் பணிகளை ஆற்றுகின்றன. அக்குடும்பங்களில், பெற்றோர், இயேசுவின் சுதந்திரமான, மற்றும், தன்னலமற்ற அன்பின் அடையாளமாக உள்ளனர். இத்தகைய நிலைகளில், கன்னிமையைத் தேர்ந்துகொண்டவர்கள், தங்களின் அர்ப்பணத்தை, இறையாட்சிக்காக, மிகுந்த தாராளத்தோடு அர்ப்பணிக்க முன்வரவேண்டும். இக்காலத்தில் நிலவிவரும் உலகப்போக்கு, தம்பதியர், வாழ்வு முழுவதும் ஒன்றித்திருப்பதன் மதிப்பை மங்கச் செய்கின்றது. திருமண வாழ்வின் அழகையும் பொலிவிழக்கச் செய்கின்றது. இக்காரணத்தினால், திருமண அன்பின் நேர்முக அம்சங்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும். 

10 June 2021, 14:14