தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை(2018-04-11) திருத்தந்தையின் மறைக்கல்வியுரை(2018-04-11)   (Vatican Media)

மகிழ்வின் மந்திரம் : திருமணமும் கன்னிமையும்

'ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும், வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது'

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவில், “வன்முறை மற்றும், ஆதாயத்துக்காகப் பயன்படுத்தல்” என்ற தலைப்பின்கீழ் வழங்கியுள்ள 5 பத்திகளைத் தொடர்ந்து, மேலும் ஐந்து பத்திகளை, திருமணமும் கன்னிமையும் என்ற தலைப்பிற்கு அர்ப்பணித்துள்ளார். அதில், முதல் இரண்டு பத்திகளில் (158,159) அவர் கூறியுள்ள கருத்துக்கள் இதோ...

திருமணம் ஆகாத பலர், தங்கள் குடும்பத்திற்கும், நண்பர் வட்டத்திற்கும், திருஅவைக்கும் என, சிறப்பு சேவையாற்றுகின்றனர். பலவேளைகளில் இந்தப் பணிகள் அங்கீகரிக்கப்படாமல் போவதால், அவர்கள் தனிமையை உணரும் சூழல்களும் ஏற்படுகின்றன. பலர் தங்கள் திறமைகளை கிறிஸ்தவ நிறுவனங்களில், பிறரன்புச் சேவைகளை ஆற்றவும், தன்னார்வப் பணிகளை மேற்கொள்ளவும் செலவிடுகின்றனர். மற்றவர்கள், திருமணம் புரிந்துகொள்ளாமலேயே, கிறிஸ்துவுக்கும் அயலவருக்கும் என தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர். இவர்களின் அர்ப்பண வாழ்வு, அவர்களின் குடும்பத்தையும், சமூகத்தையும் திருஅவையையும் வளப்படுத்துகின்றது.(அன்பின் மகிழ்வு 158)

கன்னிமை என்பது அன்பின் ஒரு வடிவம். இறையரசின் வருகை குறித்தும், நற்செய்திக்கு நாம் முழு விசுவாசத்துடன் இருக்கவேண்டிய தேவை குறித்தும் (1கொரி.7:32) இந்த அடையாளம் நமக்கு எடுத்துரைக்கிறது. 'உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை' (மத்.22:30) என இயேசு எடுத்துரைக்கும் விண்ணகத்தின் பிரதிபலிப்பாக இது உள்ளது. இனியுள்ள காலம் குறுகியதே(1கொரி.7:29) என எடுத்துரைக்கும் புனித பவுல், இயேசுவின் வருகை அருகில் இருப்பதால், அனைவரும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என கேட்பதோடு, கன்னிமை வாழ்வையும் பரிந்துரைக்கிறார். அதேவேளை, இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் (1கொரி.7:6-9), மணமாகாதவர்களைக் குறித்து ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை (1கொரி.7:25) என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 'ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும், வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது' என ஒவ்வொருவருக்கும் இருக்கும் வேறுபட்ட அழைப்புகள் குறித்தும், புனித பவுல் எடுத்துரைத்துள்ளார் (1கொரி7:7). இந்த சிந்தனைகளின் அடிப்படையில், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், பாலியல் உறவு, துறவின் அடிப்படையில், திருமணத்தின் தாழ்நிலை குறித்தோ, கன்னிமை அல்லது, மணத்துறவின் மேன்மை குறித்தோ, விவிலியப் பகுதியில் காரணங்கள் கூறப்படவில்லை என உரைக்கிறார்.  கன்னிமையின் மேன்மை குறித்துப் பேசுவதைவிட, ஒவ்வொருவருக்கும் ஓர் அழைப்பு உள்ளது, அவை ஒன்றையொன்று நிறைவு செய்கின்றன என உரைப்பதே சிறப்பாக இருக்கும். திருஅவையோடு கிறிஸ்துவின் ஒன்றிப்பு, அல்லது, இயேசுவின் தெய்வீக மற்றும் மனித இயல்புகளின் ஒன்றிப்பு என்ற உண்மை நிலைகளின்  அடையாளமாக திருமணம் இருப்பதால், மற்ற அருளடையாளங்களைவிட, திருமணம் எனும் அருளடையாளம் உயர்ந்தது என Halesன் அலெக்ஸாண்டர் அவர்கள் கூறியதை ஓர் எடுத்துக்காட்டாக இங்கு கூறலாம்.(அன்பின் மகிழ்வு 159)

09 June 2021, 11:28