தேடுதல்

Vatican News
பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியர் பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியர்  

மகிழ்வின் மந்திரம்: தாம்பத்திய உறவில் ஒருவர் ஒருவரின் மாண்பு...

பாலியல் உறவு, தம்பதியரிடையே நல்ல உறவை வளப்படுத்தும் இறைவனின் கொடையாக அமைந்துள்ளது என்ற நேர்மறையான கண்ணோட்டத்தில், நோக்கப்படவேண்டும் (அன்பின் மகிழ்வு 155)

மேரி தெரேசா: வத்திக்கான் 

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவில், “வன்முறை மற்றும், ஆதாயத்துக்காகப் பயன்படுத்தல்” (Violence and manipulation) என்ற தலைப்பின்கீழ், 153, 154, மற்றும், 155ம் பத்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பதிவுசெய்துள்ள கருத்துக்கள்...  

பாலியல் உறவு, தம்பதியரிடையே நல்ல உறவை வளப்படுத்தும் இறைவனின் கொடையாக அமைந்துள்ளது. அந்த உறவு, இத்தகைய நேர்முக கண்ணோட்டத்தில் நோக்கப்படவேண்டும். ஆனால் அந்த உறவு, இக்காலத்தில், பயன்படுத்தல், மற்றும்,  தூக்கியெறிதல் என்ற மனநிலையால் சீரழியும் ஆபத்தை எதிர்கொள்கிறது. அடுத்தவரின் உடல், திருப்திதரும்வரை பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக பல நேரங்களில் நோக்கப்படுகிறது. பாலியல் இன்பம் குறித்த இந்த புரிந்துணர்வால் இடம்பெறும் ஆதிக்க மனநிலை, இறுமாப்பு, உரிமைமீறல், முறைதவறிய பாலின்பம், மற்றும், வன்முறை ஆகியவற்றை, உண்மையிலேயே நாம் புறக்கணித்துவிட்டு வாழலாமா? திருமணத்திற்குள்ளே, பாலியல் உறவு, துன்பம் தருகின்ற, மற்றும், பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறி வருவதை நாம் அறிந்துள்ளோம். எனவே தாம்பத்தியத்தில், அடுத்தவரின் உடல்நிலையை புறக்கணித்து, அல்லது, அடுத்தவரின் தனிப்பட்ட மற்றும், சரியான விருப்பத்திற்கு மாறாக இடம்பெறும் பாலியல் உறவு, உண்மையான அன்புச் செயல் அல்ல என்பது, மிகத் தெளிவாக உணர்த்தப்படவேண்டும். இது,  கணவன், மற்றும், மனைவிக்கிடையே, ஓர் ஆழமான உறவு வளர்வதையும் பாதிக்கிறது.  எனவே கணவன் மற்றும், மனைவி ஆகிய இருவருக்கிடையே, உண்மையான மனிதத்தன்மையில், பாலியல் உறவு மேற்கொள்ளப்படும்போது, அது பாலியல் பற்றி கடவுள் வகுத்த திட்டத்தின்படி இருக்கிறது. “இந்த விவகாரத்தில், எவரும் தவறிழைத்து, தன் சகோதரரை அல்லது சகோதரியை வஞ்சிக்கக் கூடாது” (1தெச.4:6) என்று புனித பவுலும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஒவ்வொரு மனிதரும் தனக்கேயுரிய இன்றியமையாத மாண்பைக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒருவர் மற்றவரின் மாண்பைப் புறக்கணித்து, அவர் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது, அது, ஒருவர் ஒருவர்க்கிடையே நிலவவேண்டிய உறவுக் கட்டமைப்பை மாற்றுகின்றது. அந்நிலையில் அவர்கள், தங்களது பாலியல் உறவை, பொழுதுபோக்குச் செயலாக மாற்றுவர், மற்றும், திருமண பிணைப்பின் அழகையும் புறக்கணிப்பர். (அன்பின் மகிழ்வு 153,154,155)

07 June 2021, 14:49