தேடுதல்

சுற்றுலாவில் சீனக் குடும்பம் சுற்றுலாவில் சீனக் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: குடும்ப வாழ்வு முழுமையாக வாழப்படத் தகுதி

இன்பம் தங்கள் வாழ்க்கையில், பல்வேறு நேரங்களில் பல்வேறு விதமாக இருக்கும் என்பதை தம்பதியர் உணரவேண்டியது முக்கியம்

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் நான்காம் பிரிவில், “கடவுள் தம் பிள்ளைகளின் மகிழ்வை அன்புகூர்கிறார்” என்ற தலைப்பில் (பத்திகள்:147,148,149)  கூறியுள்ள கருத்துக்கள்...

திருமண வாழ்வில், உணர்ச்சிகள், மற்றும், பாலுணர்வுகள் சார்ந்தவற்றில், நெறிப்படுத்தலும், சிலநேரங்களில், கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன. அவ்வாழ்வில் உடலின்பம் என்பதை மட்டும் கொண்டிருப்பது, குடும்ப வாழ்வைப் பாதிக்கின்றது. அதேநேரம், ஒருவர், தன் பாலுணர்வுகளை, அழகான, மற்றும், பொறுப்புள்ள முறையில் வெளிப்படுத்தும்போது, அது, குடும்பத்தில், ஒருவர் ஒருவர்க்கிடையேயுள்ள உறவுகளை வளப்படுத்துகின்றது. மொத்தத்தில், குடும்ப வாழ்வு முழுமையாக வாழப்படத் தகுதியுடையது. துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு வழியாக, ஆசை தவிர்க்கப்படவேண்டும் என்று, ஆன்மீகத்தில் சில சிந்தனைகள் உள்ளன. ஆயினும், மனிதர் மகிழ்வதை கடவுள் அன்புகூர்கிறார் என்பதை நாம் நம்புகிறோம். கடவுள் நம்மை படைத்திருக்கிறார், மற்றும், “நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும், அவர் நிறைவாக அளித்திருக்கிறார்” (1 திமொ.6:17). “குழந்தாய், உள்ளத்தைக் கொண்டு உன்னையே பேணிக்கொள்... உன் வாழ்வின் இன்பங்களைத் துய்க்காமல் விட்டுவிடாதே” (சீரா.ஞா. 14:11-14). மனிதர்மீது மிகுந்த அன்புகொண்டுள்ள கடவுள் இவ்வாறு சொல்லியிருக்கிறார். இதில் நாம் அகமகிழ்வோம். திருமணமான தம்பதியர், “வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு. துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்” (சபை.உ.7:14) என்ற விவிலியக் கூற்றை நினைவில் வைத்து, தங்கள் வாழ்க்கையில் கடவுளின் திட்டத்திற்குப் பதிலளிக்கவேண்டும். இன்பம், தங்கள் வாழ்க்கையில், பல்வேறு நேரங்களில் பல்வேறு விதமாக இருக்கும் என்பதையும் தம்பதியர் உணரவேண்டியது முக்கியம். 

03 June 2021, 14:35