தேடுதல்

அன்பு பகிரப்படுகிறது அன்பு பகிரப்படுகிறது   (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் : பிறர் வாழ்விலும் மகிழ்வைக் கொணர....

மற்றவர்களின் அன்பு தேவைப்படுபவர்கள், தங்களாலும் அன்புகூரமுடியும் என்பதை உணர்ந்திருந்தாலும், மற்றவர்களின் வாழ்வில் மகிழ்வை கொணரத் தவறிவிடுகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பின் மகிழ்வு என்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடலில், குடும்ப வாழ்வில் அன்பு, என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ள கருத்துக்களில், குடும்ப வாழ்வில் உணர்வுகளின் முக்கியத்துவ இடம் குறித்து, 145 மற்றும் 146ம் பத்திகளில் கூறப்பட்டுள்ளவைகள் இதோ:

உணர்ச்சிகளை அனுபவிப்பது என்பது தன்னிலையில் ஒழுக்கரீதியாக, நன்மையோ, தீமையோ அல்ல. ஆசை எழுவது என்பது பாவமல்ல. ஆனால், அந்த ஆசையின் அடிப்படையில் நாம் என்ன செய்கிறோம் என்பதே, ஒழுக்கரீதியாக, அது நன்மையா, தீயதா என்பதை முடிவுசெய்கிறது. உணர்வுகள் தூண்டப்பட்டு தீச்செயலாகும்போது, அந்த செயலைத் தூண்டும் முடிவும், அதன் விளைவும் தீயதாகிறது. இதே கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, என்னால் கவரப்பட்ட ஒருவரை நான் அடக்கியாள முயலும்போது, அது என் சுயநலத்திற்கு மட்டுமே உதவுகிறது. நாம் நல்லவர் என்று நமக்குத் தோன்றுவதால், நாம் நல்லவர்கள்தான் என நினைப்பது ஒருவித மிகப்பெரும் மாயத்தோற்றம். மற்றவர்களின் அன்பு தேவைப்படுபவர்கள், தங்களாலும் அன்புகூரமுடியும் என்பதை உணர்ந்திருந்தாலும், மற்றவர்களின் வாழ்வில் மகிழ்வை கொணரத் தவறிவிடுகின்றனர். அவர்கள் தங்கள் தேவைகளிலேயே முடங்கிவிடுகின்றனர். இத்தகைய வேளைகளில், உயரிய மதிப்பீடுகளில் இருந்து இவர்கள் விலகி, சுயநலவாதிகளாக மாறி, ஆரோக்கியமான, மகிழ்வான குடும்ப வாழ்வை அமைக்கத் தவறி விடுகின்றனர். (அன்பின் மகிழ்வு 145)

உணர்வுகள் சுதந்திரமாகச் செயல்படுத்தப்படும்போது, அதன் ஆழம் வெளிப்படுத்தப்படுகின்றது. ஒருவரின் உணர்வுகளுடன்கூடிய வாழ்வு, குடும்பத்திற்கு முற்றிலுமாக பயன்படுவதை உறுதி செய்வதில் திருமண அன்பு உதவுகிறது, மற்றும், குடும்பத்தின் பொதுவான வாழ்விற்குரிய சேவையில் அது உள்ளது. குடும்ப அங்கத்தினர்கள் உணர்வு நிறை வாழ்வு, பெரிய முடிவுகளையும், மதிப்பீடுகளையும் கட்டுப்படுத்தாமல், ஒவ்வொருவரின் சுதந்திரத்தையும் மதித்து செயல்படுத்தும்போது, அக்குடும்பம் முதிர்ச்சியடைந்த ஒன்று என கூறலாம். இத்தகைய உணர்வு, சுதந்திரத்திலிருந்து ஊற்றெடுப்பதோடு, பலப்படுத்தப்பட்டு, முழுமையடைவதோடு, அனைவருக்கும் சேவையாற்றி ஒத்திணங்கிச் செல்வதாகிறது.(அன்பின் மகிழ்வு 146)

02 June 2021, 14:20