தேடுதல்

உறவினர்களுடன் திருக்குடும்பம் உறவினர்களுடன் திருக்குடும்பம்  

மகிழ்வின் மந்திரம் : இயேசுவின் எளிமையான குடும்பம்

இயேசு வளர்ந்தது ஒரு குறுகிய, கூட்டுப்புழு வாழ்வு முறையான ஒரு குடும்பத்தில் அல்ல, மாறாக, தன் பெற்றோரின் உறவுகளோடும், நண்பர்களோடும்கூடிய உறவிலேயே வளர்ந்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், “கனிநிறைப் பண்பை விரிவாக்குதல்” என்ற தலைப்பில், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், எவ்வாறு தங்கள் அன்பை கனிகள் நிறைந்ததாக மாற்றமுடியும் என்பது குறித்து விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோசேப்பு, மரியா, மற்றும் இயேசுவை உள்ளடக்கிய திருக்குடும்பம், எவ்வாறு உறவினர்களுடனும் மற்றவர்களுடனும் உறவுகளை வளர்த்து, ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது என்பது குறித்து 182ம் பத்தியில் கூறியுள்ளவை இதோ:

தன்னை மற்றவர்களிலிருந்து முற்றிலுமாக வித்தியாசப்படுத்திக்கொண்டு, அல்லது, தனிமைப்படுத்திக்கொண்டு வாழும் குடும்பங்களால் எவ்வித பலனுமில்லை. இத்தகைய ஒரு போக்கை மாற்றியமைக்க நாம் இயேசுவின் குடும்பத்தை நோக்க வேண்டும். அது ஒரு சாதாரண குடும்பமாக இருந்தது. இதனால்தான் இயேசுவின் ஞானம் குறித்த கேள்வி மக்களில் எழுந்தது. “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?..... இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! (மாற்.6:2-3), இவர் தச்சருடைய மகன் அல்லவா? (மத்.13: 55), என்ற கேள்விகளை எழுப்பினர் மக்கள். இந்த குடும்பம் ஓர் எளிமையான குடும்பமாக இருந்தது, சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பது, இக்கேள்விகளிலிருந்து விளங்குகிறது. இயேசு வளர்ந்தது ஒரு குறுகிய, கூட்டுப்புழு வாழ்வு முறையான ஒரு குடும்பத்தில் அல்ல, மாறாக, தன் பெற்றோரின் உறவுகளோடும், நண்பர்களோடும்கூடிய உறவிலேயே வளர்ந்தார். இந்த உண்மையை நாம், 12 வயது நிரம்பிய சிறுவன் இயேசு, எருசலேமில் தன் பெற்றோருடன் திரும்பாமல் இருந்தபோது, "பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்"(லூக்.2:44), என்ற நற்செய்தி வார்த்தைகளின் வழி புரிந்துகொள்கிறோம். சில கிறிஸ்தவ குடும்பங்கள் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாலும், பிறரை நடத்தும் முறைகளாலும், பிடிவாத குணங்களாலும், தங்களை தூரமாக வைத்து, சமுதாயத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களால் புறக்கணிக்கப்பட்டதாக, அல்லது, தீர்ப்பிடப்பட்டதாக இவர்களின் உறவினர்களேகூட உணர்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2021, 15:21