தேடுதல்

தன் குழந்தைகளுடன் சிரியா நாட்டு தந்தை ஒருவர் தன் குழந்தைகளுடன் சிரியா நாட்டு தந்தை ஒருவர் 

மகிழ்வின் மந்திரம்: தந்தை, தாயை மதித்து நட

பெற்றோரை மதிக்காத குழந்தைகளைக் கொண்டுள்ள சமுதாயம், நன்மதிப்பற்ற ஒரு சமுதாயமாக இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரைமடலின் 5ம் பிரிவில், ‘பரந்துவிரிந்த குடும்பத்தில் வாழ்வு’ என்ற மூன்றாம் பகுதியின் கீழ், 'புதல்வர்களாக, புதல்விகளாக எப்போதும் இருத்தல்', என்பது குறித்து திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

இறைவன் வழங்கிய நான்காம் கட்டளை, 'உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' (வி.ப. 20:12) என ஒலிக்கிறது. கடவுள் தொடர்புடைய கட்டளைகளைத் தொடர்ந்து, இந்த கட்டளை வருகிறது. இது புனிதத்துவத்தோடும், தெய்வீகத்தன்மையோடும் தொடர்புடையது.  'உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட' எனக் கூறப்பட்டுள்ளதை நாம் விவிலியத்தில் பார்க்கின்றோம். அதாவது, தலைமுறைகளுக்கு இடையே நிலவும் நற்பண்புகளின் இணைப்பே, வருங்காலத்திற்கும், உண்மையான மனிதகுல சமுதாயத்திற்கும் உறுதி வழங்குவதைக் காண்கிறோம். பெற்றோரை மதிக்காத குழந்தைகளைக் கொண்டுள்ள சமுதாயம், நன்மதிப்பற்ற ஒரு சமுதாயமாக இருக்கும். இச்சமுதாயம், கடுகடுப்பான, அதேவேளை, பேராசை கொண்ட இளையோரை உள்ளடக்கிய ஒரு சமுதாயமாக இருக்கும்.

இந்த நாணயத்திற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. 'இதனால், கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்' (தொ.நூ 2:24), என விவிலியத்தில் வாசிக்கிறோம். இது எப்போதும் நடப்பதில்லை. இந்த தேவையான தியாகத்தையும் சரணடைதலையும் செய்யத் தவறியதால், திருமணத்திற்கு இடையூறு ஏற்படும் சூழல்களும் உருவாவதுண்டு. பெற்றோர், ஒருநாளும், கைவிடப்படவோ, புறக்கணிக்கப்படவோ கூடாது. அதேவேளை, இளம்தம்பதியர், தங்களுக்கென பாதுகாப்பு, நம்பிக்கை, வருங்காலத்திட்டங்கள் ஆகியவைகளைக் கொண்டிருக்கவும், இருவரும் ஒரே உடலாய் இருப்பதற்கும் உதவும், புதிய இல்லத்தின் தேவையும் உள்ளது. சில திருமணங்களில், தம்பதியருள் ஒருவர் தன் துணையிடம் இருந்து சில இரகசியங்களை மறைத்துவிட்டு, அதனை தன் பெற்றோரிடம் மட்டும் பகிர்ந்துகொள்வது உள்ளது. அத்தகையச் சூழல்களில், கணவர், அல்லது மனைவியின் உணர்வுகள், மற்றும் கருத்துக்களைவிட, பெற்றோரின் கருத்து முக்கியத்துவம் பெற்றதாகிறது. இத்தகைய ஒரு சூழல் தொடரமுடியாது. காலம் எடுத்தாலும், கணவனும் மனைவியும், நம்பிக்கையிலும், உரையாடலிலும், வளர்வதற்குத் தேவையான தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கணவனும், மனைவியும், தாங்கள், தொடர்ந்து மகனாகவும் மகளாகவும் இருப்பதற்குரிய புதிய வழிகள் குறித்து கண்டுகொள்ள திருமணம் அழைப்பு விடுக்கிறது. (அன்பின் மகிழ்வு 189,190)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2021, 15:54