தேடுதல்

Vatican News
எருசலேம் எருசலேம் 

ROACO அமைப்பின் 94வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டம்

கர்தினால் லியனார்தோ சாந்த்ரி அவர்களின் தலைமையில், புனித பூமி, எத்தியோப்பியா, ஆர்மீனியா, ஜியார்ஜியா, மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் திருஅவைகள் குறித்து விவாதிக்கும் ROACO அமைப்பின் கூட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு உதவும் ROACO அமைப்பின் 94வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டம் ஜூன் 21, திங்கள் மாலை முதல் 24 வியாழன்வரை இடம்பெற்று வருவதாக கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

உரோம் நகரின்  Bonus Pastor, அதாவது, நல்லாயன் இல்லத்தில் திங்களன்று மாலை உள்ளூர் நேரம் 4 மணிக்குத் துவங்கியுள்ள இக்கூட்டத்தில், புனித பூமி, எத்தியோப்பியா, ஆர்மீனியா, ஜியார்ஜியா, மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் திருஅவைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன.

22ம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று காலை, கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லியனார்தோ சாந்த்ரி அவர்களின் தலைமையில் இடம்பெறும் திருப்பலியில், இந்த பெருந்தொற்றுக் காலத்தில் தீவிரமடைந்திருக்கும் வன்முறை, மற்றும், சமுதாய, அரசியல் நிலையற்றதன்மைகள் குறித்து சிறப்பு செபங்கள் ஒப்புக்கொடுக்கப்படும்.

இந்த நிறையமர்வுக் கூட்டத்தின் முதல் அமர்வில், புனித பூமியின் திருஅவைத் தலைவர்கள், குறிப்பாக, அங்கு பணிபுரியும் பிரான்சிஸ்கன் துறவுச் சபையினர் கலந்துகொண்டு அங்குள்ளச் சூழல்கள் குறித்து விவாதிப்பதோடு, கடந்த ஆண்டு அப்பகுதிக்கென உலக அளவில் திருஅவையில் திரட்டப்பட்ட நிதி குறித்த விவரங்களையும் வழங்குவர்.

22ம் தேதி மாலை இடம்பெறும் அமர்வில், எத்தியோப்பியா, ஆர்மீனியா, மற்றும் ஜியார்ஜியா திருஅவைகளின் நிலைகள் குறித்து விவாதிப்பதுடன், அந்நாடுகளுக்கான திருஅவை பிரதிநிதிகளும் உரையாற்றுவர்.

23ம் தேதி புதன்கிழமையன்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களுடன், சிரியா, பிரான்ஸ், செர்மனி, இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதர்களும் கலந்துகொள்வர்.

திங்களன்று துவங்கியுள்ள இந்த நிறையமர்வுக் கூட்டத்தில், கீழைவழிபாட்டுமுறை பேராயம், மற்றும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் அதிகாரிகளும் பங்குபெறுகின்றனர்.

21 June 2021, 15:00