தேடுதல்

Vatican News
வேளாங்கண்ணி அன்னை வேளாங்கண்ணி அன்னை 

வேளாங்கண்ணியில் மே 14ம் தேதி, உலகோடு இணைந்து செபமாலை

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 திருத்தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு திருத்தலம் என செபமாலை பக்திமுயற்சிகள், உலக மக்களின் இணைய வழி பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்த மே மாதத்தின் ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு திருத்தலத்திலிருந்து இணையம் வழியாக விசுவாசிகள் ஒன்றுகூடி செபமாலை செபிக்கும் திட்டத்தில், இந்தியாவின் வேளாங்கண்ணி திருத்தலத்திலிருந்து, மே மாதம் 14ம் தேதி, உலகோடு இணைந்து செபமாலை செபித்தல் இடம்பெறும்.

மே மாதம் 14ம் தேதி உள்ளூர் நேரம் காலை 5.40 மணிக்கு செபமாலை செபிப்பதுடன் துவங்கும் இந்த பக்தி முயற்சி, அன்று இரவு திருப்பலியுடன் எட்டு மணிக்கு நிறைவுக்குவரும்.

பகல் முழுவதும் இடம்பெறும் இந்த செபமாலை வழிபாட்டில், தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் செபமாலை செபிக்கப்படுமென அறிவித்துள்ளார், வேளாங்கண்ணி திருத்தல அதிபர், அருள்பணி பிரபாகர்.

வத்திக்கான் தகவல் தொடர்பகத்தால் ஒவ்வொரு நாளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இந்த தினசரி பக்திமுயற்சி, 14ம் தேதியன்று, vailankannishrine என்ற வேளாங்கண்ணி திருத்தல இணைய பக்கத்திலும், அவர்களின் யுடியூப் பக்கத்திலும் ஒளிபரப்புச் செய்யப்படும்.

மே மாதத்தின் 31 நாட்களின் இறுதி நாளில், இத்தொடர் செபமாலை பக்திமுயற்சியின் நிறைவு நிகழ்வு, வத்திக்கானில் திருத்தந்தையுடன் இடம்பெறும் என்பதால், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 திருத்தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஒவ்வொரு நாளும் ஒரு திருத்தலம் என செபமாலை வழிபாடுகள், உலக மக்களின் இணைய வழி பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்றன.

மே மாதம் முதல் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானிலிருந்து இந்த மே மாத பக்தி முயற்சியை, உலகில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென துவக்கி வைக்க, அதே நாளில், இங்கிலாந்தின் Walsingham அன்னை மரியா திருத்தலத்தில் செபமாலை செபித்தலுடன் இந்த உலகளாவிய பக்திமுயற்சி ஆரம்பித்தது.

கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்தோர், இறக்கும்போது அவர்களின் அருகில் இருக்கமுடியாத உறவினர், நோயுற்றோர், குழந்தையை கருவில் சுமக்கும் அன்னையர், மற்றும், பிறக்கவிருக்கும் குழந்தைகள், குழந்தைகள், குடும்பங்கள், சிறார், தகவல் தொடர்பு பணியாளர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள், தனியாக வாழ்வோர், சிறையிலிருப்போர், புலம்பெயர்வோர், வன்முறைக்கும் ஆள்கடத்தலுக்கும் உட்படுவோர், உலகத்தலைவர்கள், மருத்துவப்பணியாளர்கள், உலக அமைதி, இராணுவத்தினர், தீயணைப்புப் படையினர், கல்வித்துறையில் இருப்போர், தொழிலாளர்கள், தொழில் தொடர்புடையோர், திருஅவை பணியாளர்கள், திருஅவை என, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோக்கத்திற்காகச் செபிக்கப்படும் இந்த தொடர் செபமாலை பக்தி முயற்சியில், வேளாங்கண்ணி மாதா திருத்தலம் மே மாதம் 14ம் தேதி கலந்துகொண்டு, அறிவியலாளர்கள், மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனங்களுக்காக இந்த செபமாலை பக்தி முயற்சியை ஒப்புக்கொடுக்கும்.

இறுதி நாளான மே 31ம் தேதி. வத்திக்கான் தோட்டத்தில் இடம்பெறும் இந்த பக்தி முயற்சியின் நிறைவு நிகழ்ச்சியில், இப்பெருந்தொற்று முடிவுக்கு வரவும், சமுதாய, மற்றும், பொருளாதார இயல்பு வாழ்வு தொடங்கப்படவும், என்ற கருத்திற்காகச் செபிக்கப்படும்.

04 May 2021, 14:57