தேடுதல்

Vatican News
ஸ்டெல்லா மாரிஸ் அன்னை ஸ்டெல்லா மாரிஸ் அன்னை 

கினி வளைகுடாவில் கடல்கொள்ளை நிறுத்தப்பட அழைப்பு

2021ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், கடல்கொள்ளையர் மேற்கொண்ட தாக்குதல்களில், ஏறத்தாழ 43 விழுக்காடு, கினி வளைகுடாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது - ICC

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கினி வளைகுடாப் பகுதியில் அதிகரித்துவரும், கடல்கொள்ளையரின் அட்டூழியங்கள் அடக்கி ஒடுக்கப்படுமாறு, கத்தோலிக்க கடல் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பணியாற்றும், Stella Maris எனப்படும் உலகளாவிய பிறரன்பு அமைப்பு, விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

வத்திக்கானில் தனது தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பின் இயக்குனர் அருள்பணி Bruno Ciceri அவர்கள், கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல்கொள்ளையருக்கு எதிராக முயற்சிகளை மேற்கொள்ளும் அனைத்து குழுக்களுக்கும், அந்த அமைப்பின் முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகம் தடையின்றி நடைபெற பணியாற்றிக்கொண்டிருக்கும் கடல்தொழிலாளர்கள், கடல்கொள்ளையரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறியுள்ள அருள்பணி Ciceri அவர்கள், இந்த தாக்குதல்கள், உலகளாவிய பொருளாதாரத்திற்கு ஊறுவிளைவித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, இத்தாக்குதல்கள், கடல்தொழிலாளர்களின் உயிருக்கு, தொடர்ந்து அச்சுறுத்தலை விடுத்துவருகின்றன, மற்றும், அவர்களின் குடும்பங்களையும், தொடர்ந்து பதட்டநிலையில் வைக்கின்றன எனவும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடல்கொள்ளையர்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு, நிரந்தர, மற்றும், நீண்டகாலத் தீர்வு காணப்படுவதற்கு, அரசுகளும், நிறுவனங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற தன் நம்பிக்கையையும், Stella Maris  அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதேநேரம், குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அந்த அமைப்பு, கடத்தப்பட்டுள்ள கடல்தொழிலாளர்கள், அவர்கள் தங்களின் குடும்பங்களோடு ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளது.   

2021ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கடல்கொள்ளையர் நடத்திய தாக்குதல்களில், ஏறத்தாழ 43 விழுக்காடு, கினி வளைகுடாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று, ICC எனப்படும், உலகளாவிய கடல்தொழில் அமைப்பு கூறியுள்ளது. இப்பகுதியில், 40 கப்பல் தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

கினி வளைகுடா, அட்லாண்டிக் பெருங்கடலின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ளது. இது காபோன் நாட்டின் கேப் லோப்பேசிற்கும், லைபீரியாவின் கேப் பல்மாசிற்கும் இடையில் உள்ளது.

28 May 2021, 14:59