தேடுதல்

புனித யோசேப்பு, புனித அவிலா தெரேசா புனித யோசேப்பு, புனித அவிலா தெரேசா  

மகிழ்வின் மந்திரம்: புதுமைகள் புரியும் புனித யோசேப்பு

புனித யோசேப்பிடம் இரந்துகேட்டதை யாரும் பெறாமல் போனதில்லை - புனித அவிலா தெரேசா

மேரி தெரேசா: வத்திக்கான்

1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக புனித யோசேப்பை அறிவித்தார். அந்த நிகழ்வின் 150ம் ஆண்டை சிறப்பிக்கும் முறையில், கத்தோலிக்கத் திருஅவையில், 2020ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதியிலிருந்து புனித யோசேப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது., 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இந்த யூபிலி ஆண்டு நிறைவடையும். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய, புனித யோசேப்பு, இவ்வுலக வாழ்வில்,  குறைவாகப் பேசி, நிறைவாகப் பலவற்றை ஆற்றியவர். அந்தப் புனிதர் தங்களுக்கு ஆற்றிய பல புதுமைகள், மற்றும், அவரது காட்சிகள் பற்றி, பலரும்  எடுத்துரைத்து வருகின்றனர். புனித அவிலா தெரேசா குணம் அடைதல்

இஸ்பெயின் நாட்டின் அவிலா நகரைச் சேர்ந்த புனித தெரேசா, அவர் சார்ந்திருந்த கார்மேல் ஆழ்நிலை தியான சபையின் அமைப்புமுறையில் துணிச்சலுடன் மிகப்பெரும் மறுமலர்ச்சியை கொண்டுவந்தவர். திருஅவையின் மறைவல்லுனர்களில் ஒருவராகிய இவர், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பிடம் எல்லையற்ற, அசைக்கமுடியாத ஆழ்ந்த பக்தி கொண்டவர். புனித அவிலா தெரேசா, அவிலா நகரில், இயேசுவின் மனிதஉரு என்ற பெயர்கொண்ட கார்மேல் துறவு சபை இல்லத்தில் வாழ்ந்தபோது, கடுமையான நோயினால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில், இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் இவர் இறந்துவிட்டார் என்றே கருதப்பட்டது. ஆனால், புனித தெரேசா, புனித யோசேப்பிடம் உருக்கமாக மன்றாடினார். அவரது மன்றாட்டும் கேட்கப்பட்டது. இப்புனிதர், “வாழ்வின் நூல் (Book of Life)” என்ற புத்தகத்தில், பிரிவு ஆறில், இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார். இந்த மகிமையான விண்ணகத் தந்தையான புனித யோசேப்பை எனது ஆலோசகர், போதகர், மற்றும், தலைவராகக் கொண்டிருக்கிறேன். நான் அவரிடம் என்ன கேட்டாலும், அதை கடவுள், இந்த பேறுபெற்ற புனித யோசேப்பு வழியாக எனக்குக் கொடுத்திருக்கிறார். எனது உடலும், ஆன்மாவும் அழியும் நிலையிலிருந்தபோது, புனித யோசேப்பே என்னைக் காப்பாற்றினார். இந்த எனது அனுபவத்தை வைத்து, புனித யோசேப்பு பக்தியில் வளருமாறு எல்லாரையும் விண்ணப்பிக்கின்றேன். புனித யோசேப்பிடம் இரந்துகேட்டதை யாரும் பெறாமல் போனதில்லை. இவ்வாறு, புனித அவிலா தெரேசா உறுதியாகச் சொல்லியிருக்கிறார். இவர், 1622ம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம் கிரகரி அவர்களால் புனிதராகவும், 1970ம் ஆண்டு திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் திருஅவையின் மறைவல்லுனராகவும் அறிவிக்கப்பட்டார்.

புனித அவிலா தெரேசா

புனித தெரேசா, 1515ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் நாள், இஸ்பெயின் நாட்டின் அவிலா என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் இவரை பக்தி நிறைந்தவராக வளர்த்து வந்தார்கள். தன்  வீட்டுத் தோட்டத்தில் குடிசை ஒன்று கட்டி, அ தில் துறவியைப் போன்று வாழ்ந்து வந்த இவர், மூர் இனத்தவருக்கு நற்செய்தி அறிவித்து, மறைசாட்சியாக உயிர்துறக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் அச்சமயத்தில் இவருடைய அன்னை இறைவனடி சேர்ந்தார். அதற்குப்பின், இவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது. இயல்பிலேயே பேரழகியாக விளங்கிய தெரேசா, கடவுளை மறந்து, உலகப்போக்கில் வாழத் தொடங்கினார். ஆயினும், இவர் கார்மேல் ஆழ்நிலை தியான இல்லத்தில் துறவியாகச் சேர்ந்தபின், மீண்டும் இவரது வாழ்க்கைப்பயணம் மாறியது. இவர், அச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டபின், கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக, துறவிகள்  நீண்ட நேரம் இறைவேண்டலிலும் தனிமையிலும் தங்களுடைய நேரத்தை செலவழிக்க இவர் கேட்டுக்கொண்டார். புனித தெரேசா, மிகக் குறுகிய காலத்திலேயே பெண்களுக்கென்று 17 துறவு இல்லங்கள், மற்றும், ஆண்களுக்கென்று 15 இல்லங்களை உருவாக்கினார்.  மிகச் சிறந்த எழுத்தாளராக விளங்கிய இவர் எழுதிய The Way of Perfection, The Autobiography, Interior Castle போன்ற நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

23 May 2021, 12:00