தேடுதல்

Vatican News
அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் 

வேளாங்கண்ணி திருத்தலத்தில் மாரத்தான் செபமாலை

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும், அத்தொற்றுக்கிருமி ஒழியும்படியாகவும், அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் சிறப்பு இறைவேண்டல்கள் எழுப்பப்பட்டன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த உலகினின்று கோவிட்-19 பெருந்தொற்று ஒழியும்படியாக, மே 14, இவ்வெள்ளியன்று தமிழகத்தின் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் செபமாலை பக்திமுயற்சி நடைபெற்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பின்பேரில், அன்னை மரியாவுக்கு சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு முக்கிய திருத்தலத்தில், ஒவ்வொரு கருத்துக்காக, மாரத்தான் செபமாலை பக்திமுயற்சி நடைபெற்றுவருகிறது.

இவ்வெள்ளியன்று, அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் நடைபெற்ற மாரத்தான் செபமாலை பக்திமுயற்சியின்போது, நோயைக் குணமாக்கும் வழிமுறைகளைக் காண்பதற்கு, தளராது பணியாற்றிவரும் அறிவியலாளர்கள், மற்றும், மருத்துவ ஆய்வு நிறுவனங்களுக்காக மன்றாட்டுகள் எழுப்பப்பட்டன.

அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில், உள்ளூர் நேரம் காலை 5.40 மணிக்கு திருப்பலியோடு தொடங்கப்பட்ட இந்த பக்திமுயற்சியில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும், அத்தொற்றுக்கிருமி ஒழியும்படியாகவும் சிறப்பு இறைவேண்டல்கள் எழுப்பப்பட்டன.

மே 15, இச்சனிக்கிழமையன்று, போஸ்னியா குடியரசிலுள்ள, மெஜ்ஜூகோரே அமைதியின் அன்னை மரியா திருத்தலத்தில், புலம்பெயர்ந்தோருக்காக, மாரத்தான் செபமாலை பக்திமுயற்சி நடைபெறும்.

மாதா தொலைக்காட்சியில் 24 மணி நேர ஆராதனை

கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து அனைவரும் குணம் பெறுவதற்காக, மாதா தொலைக்காட்சியில், மே 15, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 6 மணி முதல், மறுநாள், உள்ளூர் நேரம் காலை 6 மணி வரை, 24 மணி நேர, தொடர் நற்கருணை ஆராதனை நடைபெறுகின்றது. சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும், தமிழக ஆயர் பேரவையின் இந்த தொலைக்காட்சி வழியாக, அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஆராதனையில் அனைவரும் ஒன்றிணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆயர் பேரவையின் தலைவரான, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், சனிக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி இதனை ஆரம்பித்து வைக்கிறார். சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள், மே 16, ஞாயிறு காலை 6 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி இதனை நிறைவு செய்து வைக்கிறார். (Agencies)

14 May 2021, 16:35