தேடுதல்

Vatican News
இராஞ்சி பேராயர் பீலிக்ஸ் டோப்போ, துணை ஆயர் மஸ்கரீனஸ் - மதிய உணவு பரிமாறுதல் இராஞ்சி பேராயர் பீலிக்ஸ் டோப்போ, துணை ஆயர் மஸ்கரீனஸ் - மதிய உணவு பரிமாறுதல் 

இராஞ்சியில், கோவிட் நோயாளிகளுக்கு இலவச உணவு

பெங்களூரு மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, இளவயது அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் முன்வந்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கபப்ட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தில், இராஞ்சி உயர்மறைமாவட்டம், பெருந்தொற்று நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இலவச உணவு வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இராஞ்சி நகரில் அமைந்துள்ள மிகப்பெரும் இராஜேந்திரா மருத்துவ மனைக்கு முன்புறம் உள்ள வளாகத்தில், இலவச உணவு வழங்கும் முயற்சியை, இராஞ்சி உயர் மறைமாவட்ட இளையோர் பணிக்குழு ஆற்றிவருகிறது.

உணவு வழங்கும் இளையோரின் முயற்சியைத் துவக்கிவைத்த, இராஞ்சி உயர்மறைமாவட்ட துணை ஆயர், தியடோர் மஸ்கரீனாஸ் அவர்கள், இதுவரை, எங்களை இந்தப் பெருந்தொற்றின் தாக்குதலிலிருந்து காத்துவந்துள்ள விண்ணகத் தந்தைக்கு நன்றிகூறும் வண்ணம், இந்த நோயினால் நலிவடைந்துள்ள மக்களுக்கு உதவிகள்செய்ய முன்வந்துள்ளோம் என்று, கூறினார்.

பெங்களூருவில் உதவிகள் செய்யும் இளையோர்

மேலும், கோவிட்-19 பெருந்தொற்றின் 2ம் அலையால் பெருமளவு பாதிக்கபப்ட்டுள்ள பெங்களூரு மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, இளவயது அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் முன்வந்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

பெங்களூரு உயர் மறைமாவட்டமும், புனித கமில்லஸ் துறவு சபையும் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்த உதவிகள், "பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்ற நற்செய்தி கூற்றை, விருதுவாக்காகக் கொண்டு செய்யப்படுகின்ற்ன என்று, பெங்களூரு உயர்மறைமாவட்ட இளையோர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி Anil D'Sa அவர்கள் கூறினார்.

மருத்துவ உதவிகள் செய்வதில் பயிற்சி பெற்றுள்ள இவர்கள் செய்யும் உதவிகள், பெரும் கடலில் கலந்துள்ள ஒரு சிறு துளியே என்று குறிப்பிட்ட அருள்பணி Anil D'Sa அவர்கள், மே 3ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த உதவிகள் செய்வதில் உள்ள ஆபத்துக்களை நன்கு உணர்ந்தவர்களாய், இப்பணியில் ஈடுபட்டிருக்கும் இளையோர், வெறும் மருத்துவ உதவிகள் மட்டும் அல்லாமல், தேவைப்படுவோருக்கு ஆன்மீக உதவிகளை வழங்கி வருகின்றனர் என்று அருள்பணி Anil D'Sa அவர்கள் எடுத்துரைத்தார்.

05 May 2021, 16:19