தேடுதல்

உரோம் இலாத்தரன் பெருங்கோவில் உரோம் இலாத்தரன் பெருங்கோவில் 

திருத்தந்தையர் வரலாறு – அரசியல் சூழ்ச்சிக்கு பலியான திருத்தந்தை

திருத்தந்தை 4ம் கிரகரி - பேரரசர் Louis வழியாக, பேரரசு முழுவதும் அனைத்து புனிதர்களின் விழா ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட ஊக்குவித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையின் 100வது  திருத்தந்தையாக வாலண்டைன் அவர்கள் பதவியேற்று, 40 நாட்கள் மட்டுமே திருஅவையை வழிநடத்தியது குறித்து கடந்த வாரம் கண்டோம்.

இவரைத் தொடர்ந்து, 827ம் ஆண்டு இறுதியில் தேர்வு செய்யப்பட்டத் திருத்தந்தை 4ம் கிரகரி அவர்கள், மிகுந்த பக்தியுள்ளவராகவும், கல்வியறிவுடையவராகவும் இருந்த காரணத்தால், திருத்தந்தை முதலாம் Paschal அவர்களால் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உரோம்நகரின் பிரபுக்கள், இவர் திருத்தந்தையாக திருநிலைப்படுத்தப்படுவதில்  காலதாமதத்தை  ஏற்படுத்தினர். ஒரு திருத்தந்தை திருநிலைப்படுத்தப்பட, பேரரசரின் நேரடி அனுமதி தேவையில்லை. பிரதிநிதிகள் ஒப்புதலே போதும் என்ற நிலைப்பாடு இருப்பினும், பேரரசரின் பிரதிநிதிகளோ, பேரரசரின் அனுமதியின்றி திருநிலைப்படுத்தல் இடம்பெறக்கூடாது என அடம் பிடித்தனர். இதனால் திருத்தந்தை4ம் கிரகரி அவர்கள், 828ம் ஆண்டு மார்ச் மாதம்தான் பதவியேற்க முடிந்தது. மிகுந்த பக்தியுடைய இத்திருத்தந்தை, ஒரு முறை அரசியல் சூழ்ச்சியால் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்ட கதையும் உண்டு. அதற்கு நாம் அன்றைய அரசியல் பின்னணியைக் கொஞ்சம் புரிந்து கொள்ளவேண்டும்.

பிரான்ஸ் பேரரசர் அதாவது பிராங்ஸ் மன்னர் லூயியிக்கு மூன்று மகன்கள். இந்த பேரரசின் கீழ்தான் இத்தாலி இருந்தது. முதலாம் Lothair, Pepin, Louis the German என்ற இம்மூன்று மகன்களுள் மூத்தவரான முதலாம் Lothair, இத்தாலி பகுதியை ஆட்சி செய்துவந்தார். பேரரசர் லூயியின் முதல் மனைவி, அதாவது இந்த மூன்று மன்னர்களின் தாய் மரணமடைந்தபோது, பேரரசர் இரண்டாம் திருமணம் புரிந்து ஓர் ஆண்மகவும் பிறந்தது. புதிய அரசி Judith, தன் மகன் Charles the Bald என்பவரை, அனைத்திலும் முன்நிறுத்தியதால் கோபமடைந்த மூன்று மூத்த மகன்களும், தங்களின் தந்தைக்கு எதிராக ஆயதங்களை கையிலேந்தி, அவரை சிறைப்பிடித்தனர். ஏற்கனவே,  முன்னாள் திருத்தந்தை முதலாம் Paschal அவர்களின் ஆலோசனையின் பேரில் பேரரசை மூன்றாக, தன் மகன்களிடையே பேரரசர் பிரித்த ஒப்பந்தம், தற்போது காப்பாற்றப்படவேண்டும் என அவரை வலியுறுத்தினர் அவரது மூன்று மகன்களும். ஆனால், மூன்று மகன்களுக்குள்ளும் துவங்கிய மோதலால், அவர்கள் பலவீனமாக, பேரரசர் லூயி, திருத்தந்தை 4ம் கிரகரியின் தலையீட்டின் பேரில் மீண்டும் பதவியலமர்ந்தார். மீண்டும் மூன்று சகோதரர்களும் ஆயுதம் எடுத்தனர். அதில் இத்தாலியை ஆண்ட மன்னர் முதலாம் Lothair திருத்தந்தையிடம் வந்து, தன் தந்தை, பேரரசர் லூயியிடம் வந்து, தனக்காக சமாதானம் பேசவருமாறு அழைத்தார். திருத்தந்தையும் அமைதி பேச்சுவார்த்தைக்கென உடன் சென்றார். ஆனால் பிரான்ஸ்க்கு சென்று மன்னர் Lothair அமைத்த எதிர் முகாமில் தங்கினார் பாப்பிறை. இதனால் பிரான்ஸ் ஆயர்களும், ஏன் பேரரசர் Louisம் திருத்தந்தை மீது சந்தேகம் கொண்டனர். திருத்தந்தை தன்னுடன் இருக்கும்போதே இத்தாலி மன்னர் Lothair, தன் தந்தை பேரரசர்  Louisன் போர் வீரர்களை தன் பக்கம் வஞ்சகமாக இழுத்துக்கொண்டார். இதனால், திருத்தந்தை 4ம் கிரகரியின் பெயரும் கெட்டது. சமாதானம் பேச என திருத்தந்தையை அழைத்துச்சென்ற மன்னர், பேரரசில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, திருத்தந்தையின் வெகுளித்தன்மையை பயன்படுத்திக்கொண்டார் என்பதே உண்மை.

840ம் ஆண்டு, பேரரசர் Louis மரணமடைந்தபோது, மன்னர் Lothair ஆல்ப்ஸ் மலையைத்தாண்டி, முத்தமகன் என்ற அடிப்படையில் பேரரசர் பட்டத்தையும் எடுத்து, தன் சகோதரர்களுக்கு எதிராகவே போர்தொடுத்தார். பிராங்ஸ் பேரரசு வீழ்ச்சியடைய தொடங்கிய காலமது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட, இத்தாலிய தென்பகுதியில் வாழ்ந்த  Saracens என்ற இஸ்லாமிய குழு, முதலில் Sicily தீவைக் கைப்பற்றி, பின்னர் ஏனைய பகுதிகளையும் கைப்பற்ற புறப்பட்டனர். இதனால் திருத்தந்தை 4ம் கிரகரி, உரோம் நகரைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. இவர் காலத்தில், உரோமை நகரைச் சுற்றிய கிராமங்களில், மக்களுக்கென விவசாய, அல்லது, பண்ணை காலனி குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்பட்டன. திருத்தந்தை 4ம் கிரகரிதான், பேரரசர் Louis வழியாக, பேரரசு முழுவதும் அனைத்து புனிதர்களின் விழா ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட ஊக்குவித்தார். 844ம் ஆண்டு, சனவரி மாதம் திருத்தந்தை 4ம் கிரகரி இறையடி சேர்ந்தபோது, புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.

திருத்தந்தை 4ம் கிரகரிக்குப்பின் பதவிக்கு வந்தார், திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸ்.   திருத்தந்தை 4ம் கிரகரி இறந்தபோது, பெரும்பான்மையானோர், தலைமைக்குருவாக இருந்த செர்ஜியுஸின் பெயரையே முன்மொழிந்தனர். ஆனால் ஒரு சிறு பிரிவினரோ ஜான் என்பவரின் பெயரை முன்வைத்தனர். இதனால் ஜான் என்பவர், ஒரு துறவு இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டு, செர்ஜியுஸ் அவர்களே, திருத்தந்தையாக தேர்வுசெய்யப்பட்டார். இவரின் தேர்வும், பதவியேற்பும், முன்னாள் இத்தாலிய மன்னரும், இந்நாள் பிரான்சின் பேரரசருமாகிய lotheirக்கு அறிவிக்கப்படாததால் கோபம் கொண்ட பேரரசர், தன் மகன் louisஐ ஒரு படையோடு உரோம் நகருக்கு அனுப்பி, இத்திருத்தந்தையின் தேர்வு குறித்து விசாரிக்கச் சொன்னார். ஆனால் இளவரசர் louisஐ சமாதானப்படுத்திய திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸ், அவரை, மன்னராக முடிசூட்டவும் செய்தார். இத்திருத்தந்தையின் காலத்தில்தான் Saracens என்ற இஸ்லாமிய கடற்கொள்ளைக்காரர்கள் புனித பேதுரு மற்றும் பவுல் பெருங்கோவில்களில் புகுந்து கொள்ளையடிக்கவும் செய்தனர். இவர்களை பெரிய அளவில் தடுத்தது, உரோம் நகரைச் சுற்றியிருந்த பெரிய காப்புச்சுவர்களே என்பதையும் நாம் குறிப்பிட்டாகவேண்டும். 844ம் ஆண்டு, சனவரியில் பதவியேற்று 847ம் ஆண்டு, சனவரியில் காலமானார், திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸ்.

இவருக்குப்பின் வந்த திருத்தந்தை 4ம் லியோ குறித்து, வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2021, 14:52