தேடுதல்

Vatican News
திருத்தந்தை 2ம் யூஜின் பணியாற்றிய சாந்தா சபீனா பசிலிக்கா திருத்தந்தை 2ம் யூஜின் பணியாற்றிய சாந்தா சபீனா பசிலிக்கா 

திருத்தந்தையரின் வரலாறு - 100வது திருத்தந்தையின் 40 நாள் பணி

திருத்தந்தை 2ம் யூஜின், எளிமையானவராக, பணிவுள்ளவராக, கடவுளுக்கு விருப்பமானதை மட்டுமே நிறைவேற்றுபவராக வாழ்ந்தவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஏழு ஆண்டுகள் திருஅவையின் தலைமைப்பொறுப்பை ஏற்று வழிநடத்திய திருத்தந்தை முதலாம் பாஸ்கல் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, 824ம் ஆண்டு, திருத்தந்தை 2ம் யூஜின் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். திருத்தந்தை முதலாம் பாஸ்கல் அவர்கள், திருஅவை நிர்வாகத்தில் உரோம் பிரபுக்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதில் ஓரளவு வெற்றி கண்டுவந்தார். ஆனால், அவர் இறந்தவுடன், அந்த பிரபுக்கள், பிராங்ஸ் மன்னர் லூயி அவர்களின் உதவியை நாடி, தங்களுக்குச் சாதகமான ஒருவரை, திருத்தந்தையாக தேர்வு செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

அப்போது, உரோம் நகர், சாந்தா சபீனா பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளராக இருந்த யூஜினை அவர்கள் தெரிவு செய்தனர். ஏற்கனவே, 769ம் ஆண்டு, திருத்தந்தை 4ம் ஸ்தேவான அவர்கள், பொதுநிலையினர் திருத்தந்தையின் தேர்வில் பங்கெடுக்கமுடியாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருந்த போதிலும், பிரபுக்கள் தலையிட்டு, யூஜின் அவர்களை திருத்தந்தையாக்கினர். ஆனால், திருத்தந்தை 2ம் யூஜின் அவர்களோ, எளிமையானவராக, பணிவுள்ளவராக, கல்வியறிவு நிறைந்தவராக, தாராள மனதுடையவராக கடவுளுக்கு விருப்பமானதை மட்டுமே நிறைவேற்றுபவராக வாழ்ந்தவர். அவர் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டதில், பிராங்ஸ் மன்னருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. பேரரசர் லூயி அவர்கள், தன் மகன் Lothair அவர்களை உரோம் நகருக்கு அனுப்பிவைத்து, பிராங்ஸ் மன்னரின் ஆதிக்கத்தைப் பலப்படுத்தினார்.

உரோம் பிரபுக்களின் ஆதிக்கம் தலைதூக்கியதால், இதற்கு முந்தைய காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் உரோமிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரபுக் குடும்பத்தினர் அனைவரும், தற்போது உரோம் நகருக்கு திருப்பி அழைக்கப்பட்டனர். பிரான்சிற்கு தப்பியோடிய இவர்கள் திருப்பி அழைக்கப்பட்டது மட்டுமல்ல, இவர்களின் சொத்துக்களும் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டன.

இவ்வேளையில், திருஉருவ வழிபாடு குறித்த பிரச்சனை மீண்டும் தலைதூக்கியது. கிரேக்கப் பேரரசர், 2ம் மீக்காயேல் அவர்கள், முதலில் இதுகுறித்து சகிப்புத் தன்மையுடன் செயல்பட்டாலும், காலப்போக்கில், திருஉருவ வழிபாட்டாளர்களை சித்ரவதை செய்யத் தொடங்கினார். அது மட்டுமல்ல. இது தொடர்புடைய விடயங்களில் பிராங்ஸ் மன்னர் லூயி அவர்களின் ஒத்துழைப்பையும் நாடினார். ஆனால், பேரரசர் லூயி அவர்களோ, இது குறித்து முடிவெடுப்பதற்கு முன், திருத்தந்தையுடன் கலந்து பேச விழைந்தார். திருத்தந்தை 2ம் யூஜின் அவர்களுடன் ஆலோசனை செய்து, ஆயர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, திரு உருவ வழிபாடு குறித்த திருஅவைத தந்தையரின் கருத்துக்களை ஆய்வு செய்ய வைத்தார். ஆனால், 825ம் ஆண்டு, பாரிஸ் நகரில் கூடிய இந்த அவையால், தெளிவிற்குப் பதில், குழப்பமே அதிகரித்தது.

இதனால், திருத்தந்தை 2ம் யூஜின் அவர்கள் 826ம் ஆண்டு, 62 ஆயர்களைக் கொண்ட ஆயர் மாமன்றம் ஒன்றை உரோம் நகரில் கூட்டினார். அதில், 38 விதிகள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆயர்கள் மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவை, திருத்தந்தை யூஜின் அவர்களது அறிவுத்திறமையின் வெளிப்பாடாக இருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 827ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை 2ம் யூஜின் அவர்கள் உயிரிழந்தபோது, அன்றைய வழக்கப்படி, புனித பேதுரு பெருங்கோவிலில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

திருத்தந்தை 2ம் யூஜின் அவர்களைத் தொடர்ந்து தலைமைப் பணிக்கு வந்தவர் திருத்தந்தை வாலன்டைன். இவருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதாவது, இவரே, திருஅவையின் 100வது திருத்தந்தை. உரோம் மறைமாவட்டத்தில் பிறந்த இவர், வெறும் 40 நாள்களே திருஅவையை வழிநடத்தினார். இவர், திருத்தந்தை முதலாம் பாஸ்கல் அவர்களால் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். அதுமட்டுமல்ல, திருத்தொண்டர்களின், தலைமைத் திருத்தொண்டராகவும் நியமிக்கப்பட்டார். திருத்தந்தை 2ம் யூஜின் அவர்களும் இவரை உயர் பதவியிலேயே வைத்திருந்தார்.

827ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி, திருத்தந்தை 2ம் யூஜின் அவர்கள் இறந்தபோது, அருள்பணியாளர்களும், உரோம் பிரபுக்களும், உரோம் மக்களும் ஒரு மனதாக இசைவளித்து, வாலன்டைன் அவர்களை தேர்வு செய்தனர். இலாத்தரன் பெருங்கோவிலில் இவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட வேளையில், இவரோ, மேரி மேஜர் பெருங்கோவிலில் இறைவேண்டல் செய்துகொண்டிருந்தார்.

இலாத்தரன் பெருங்கோவிலில் கூடியிருந்த அனைவரும் மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு பவனியாகச் சென்று, வாலன்டைன் அவர்களை இலாத்தரன் பெருங்கோவிலுக்கு பெரும் ஆரவார ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதற்கடுத்த நாள், அவர், புனித பேதுரு பெருங்கோவிலில் உரோமை ஆயராக, அதாவது, திருத்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார். திருத்தந்தை வாலன்டைன் அவர்கள், 40 நாள்களே திருஅவையை வழிநடத்தியபின், அக்டோபர் மாதம் இறையடி சேர்ந்தார். சில வரலாற்று ஆசிரியர்கள், இவர், ஒரு மாத காலமே இப்பதவியை வகித்தார் என்றும் கூறுகின்றனர்.

இவருக்கு அடுத்துவந்த திருத்தந்தையரைக் குறித்து நாம் வரும் வாரம் நோக்குவோம்.

 

12 May 2021, 16:27