தேடுதல்

அன்னை மரியா மற்றும் திருத்தூதர்கள் மீது இறங்கிவரும் தூய ஆவியானவர் அன்னை மரியா மற்றும் திருத்தூதர்கள் மீது இறங்கிவரும் தூய ஆவியானவர் 

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா: ஞாயிறு சிந்தனை

தூய ஆவியார் உயிர் மூச்சாக விளங்குகிறார் என்று கூறும் விவிலியச் சொற்கள், இன்று நாம் வாழும் சூழலில், நமக்கு உறுதியூட்டும் சொற்களாக விளங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா: ஞாயிறு சிந்தனை

இஞ்ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்து’ என்றும் அழைக்கிறோம். ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள். உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவந்த ஐம்பது நாட்களில், இறைஇரக்க ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு, விண்ணேற்றப் பெருவிழா என்று, பல விழாக்களைக் கொண்டாடினோம். இனிவரும் நாட்களிலும், மூவொரு இறைவன், கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தம், கிறிஸ்துவின் திரு இருதயம் என்று, விழாக்களும், கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும், நமது கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான மறையுண்மைகள், முதன்முதலில் நிகழ்ந்தபோது, உலகினர் கவனத்தை ஈர்க்கும்வண்ணம், எக்காள முழக்கமும், வாணவேடிக்கைகளும், இடம்பெற்றிருக்க வேண்டாமா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்நிகழ்வுகள் ஒவ்வொன்றும, முதன் முதலில் நடந்தபோது, அமைதியாய் நடந்தன.

எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல், நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை, உயிர்ப்பு. நெருங்கியச் சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவோ, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

‘விழா’ என்ற சொல்லுக்கு, இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திலிருந்து, முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை, திருஅவையில் நாம் சிறப்பிக்கும் இவ்விழாக்கள் வகுத்துள்ளன. உலகம் வகுத்துள்ள இலக்கணத்தில், பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே, விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்தநாள் கேட்டால்கூட, நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே, நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும்.

அண்மையில் நமக்கு எரிச்சலையும், ஏன், கோபத்தையும் உண்டாக்கிய விழாக்கள், இப்போது நம் நினைவில் வலம்வருகின்றன. இவ்வாண்டு மார்ச் மாதம், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் கொண்டாட்டங்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. இன்று, இந்தியாவில் நிகழும் உயிர் பலிகளுக்கு, அக்கொண்டாட்டங்கள் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தன என்பதை யாரும் மறுக்கஇயலாது. மக்களின் உயிர்களை, ஏணிகளாகப் பயன்படுத்தி, அரியணை எறியபின், ஏணிகளை எட்டி உதைப்பது, அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்கு, பாடங்களையும் சொல்லித்தந்துள்ளனர், இயேசுவும், அவரது சீடர்களும். கொண்டாட்டம் என்பது, எப்போதும், பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே குறியாய் இருக்கவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள்பொருள் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில், நம் கவனம் இருக்கவேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள், ஒருநாள் கேளிக்கையாகக் கடந்துபோகாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்பாக அமையும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய முப்பெரும் விழாக்கள்.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று, இறைவனின் ஆவியைக் குறித்து விவிலியம் பயன்படுத்தும் உருவகங்களை சிந்திப்பது பயனுள்ள ஒரு முயற்சி. குறிப்பாக, இவ்வாண்டு, கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையினால் நசுக்கப்பட்டுள்ள இந்தியாவில், மூச்சுக்காற்றுக்காக மக்கள் போராடிவரும் வேளையில், தூய ஆவியார் மூச்சுக்காற்றாக இருக்கிறார் என்பதை, விவிலியத்திலிருந்து புரிந்துகொள்வதும், அவ்வுண்மையை நம்பி ஏற்றுக்கொள்வதும் அவசியம். தூய ஆவியாரின் வருகை, இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர்கள் பணிகள் 2:1-11) காற்று, நெருப்பு என்ற இரு அடையாளங்களால் கூறப்பட்டுள்ளது.

தூய ஆவியாரை, மூச்சுக்காற்றாக உருவகப்படுத்தும் வேறு சில விவிலியப் பகுதிகளை நினைவுக்குக் கொணர்வோம்:

மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதன் மீது, ஆண்டவராகிய கடவுள், 'உயிர்மூச்சை ஊத', மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்று தொடக்க நூலில் வாசிக்கிறோம் (தொடக்க நூல் 2:7).

பள்ளத்தாக்கில் நிறைந்திருந்த எலும்புகள் மீது, நரம்புகள், தசை, தோல் என்று படிப்படியாக இணைக்கப்பட்டு, அவ்வுடல்களில் உயிர்மூச்சு புகுந்ததும், அவை அனைத்தும் மாபெரும் படைத்திரள்போல் நின்றன (எசேக்கியல் 37:1-10) என்பது, இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் நாம் காணும் ஓர் அழகிய காட்சி.

புதிய ஏற்பாட்டைப் பொருத்தவரை, தூய ஆவியாரின் வருகை என்ற நிகழ்வு, திருத்தூதர் பணிகள் நூலில் மட்டுமே இடம்பெற்றுள்ளது, நற்செய்திகளில் இது ஒரு நிகழ்வாகக் கூறப்படவில்லை என்பதை நாம் அறிவோம். இருப்பினும், உயிர்த்த இயேசு, சீடர்களுக்குத் தோன்றியவேளையில், அந்த மேலறையில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது என்பதை, யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்." என்றார். (யோவான் 20:21-22)

படைப்பின் துவக்கத்தில் மண்ணால் உருவாக்கப்பட்ட மனிதனின் நாசிகளில் ஆண்டவராகிய கடவுள், உயிர் மூச்சை ஊதி, மனிதரைப் படைத்ததுபோல், தன் சீடர்கள் மீது, இயேசு, உயிர் மூச்சை ஊதி, அவர்களை, புதுப் படைப்பாக மாற்றினார்.

நம் வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய அளவுகோலாக உயிர்மூச்சு உள்ளது என்பதை, கடந்த ஓராண்டளவாக, குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக மிகத் தெளிவாக உணர்ந்துவருகிறோம். ‘மூச்சு விடுதல்’ என்ற இந்த ஒரு செயல்பாடுதான், பிறந்தது முதல் நம்மை இயக்கிவருகிறது.

மருத்துவராகவும், எழுத்தாளராகவும் விளங்கும் Geoffrey Simmons என்பவர் எழுதிய "Billions of Missing Links" என்ற நூலில், ஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில் நிகழும் விந்தைகளை விளக்கிக்கூறியுள்ளார்:

“தாயின் உதரத்திலிருந்து வெளியேறும் வரை, குழந்தை தானாகவே சுவாசிப்பதில்லை. அது, வெளியேறுவதற்கு முன்னர், அன்னையின் உதரத்தில் சுவாசிக்க ஆரம்பித்தால், சூழப்பட்ட திரவத்தால் மூச்சடைத்துப்போகும்; வெளியேறியபின், தாமதமாகச் சுவாசித்தால், மூளைப்பகுதி பாதிக்கப்படும். இவ்வாறு, பல வியப்பான அம்சங்கள் இணைந்து, ஒரு புதிய உயிரை இவ்வுலகிற்கு கொணரும் புதுமையைப் புரிகின்றன”.

தாயின் உதரத்திலிருந்து வெளியேறிய அந்நொடியில், நமது நுரையீரலை நிறைத்திருந்த நீரை வெளியேற்றிவிட்டு, நாம் முதல்முறை, சுயமாக, சுகமாக சுவாசிக்க ஆரம்பித்தோம். இருப்பினும், சுகமான அத்தருணத்தை, ஒவ்வொரு குழந்தையும், தன் அழுகையால் அறிவிக்கிறது. அக்குழந்தையின் அழுகுரல், சூழ இருப்பவர்களை மகிழ்வில் நிறைக்கிறது. இத்தருணத்தை, நாம், இன்றைய பெருவிழாவுடன் இணைத்து சிந்திக்கும்போது, தூய ஆவியார் தனக்குள் வந்துவிட்டார் என்பதை, அக்குழந்தை, தன் அழுகையின் வழியே இவ்வுலகிற்கு அறிவிக்கிறது என்று கூறலாம்.

சராசரி மனித வாழ்வில், ஒவ்வொருவரும் 650 மில்லியன் முறை, அதாவது 65 கோடி முறை சுவாசிக்கிறோம். ஒரு மூச்சிலிருந்து அடுத்த மூச்சுக்கு நம்மை அழைத்துச் செல்வது, ஆண்டவராகிய கடவுள் நம் நாசிகளில் ஊதிய உயிர் மூச்சே. ஆண்டவர் வழங்கிய இந்த அற்புதக் கோடைக்கு நாம் அளிக்கவேண்டிய பதிலிறுப்பு என்ன? நாம் அனைவருமே, அனைத்து உயிர்களின் உயிர்மூச்சைப் பராமரிக்க உருவாக்கப்பட்ட 'தோட்டக்காரர்களாக' வாழ்வதே, நாம் தரக்கூடிய தகுதியான பதிலிறுப்பு.

இந்த ஞாயிறன்று நம் பதிலுரைப் பாடலில் "ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" (திருப்பாடல் 104:30) என்று மீண்டும், மீண்டும் கூறினோம். ஆனால், மனிதர்களாகிய நாம், நமது சுயநலத்தால், நம்மைச் சுற்றியுள்ள படைப்புக்களைப் புதுப்பிப்பதற்கு வரும், அந்த ஆவியின் மூச்சை நிறுத்த முற்பட்டுள்ளோம். ஆண்டவர் வழங்கிய அற்புதக் கொடையான காற்றை, களங்கப்படுத்திவிட்டோம். இப்போது, அந்தக் காற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து வலம்வருகிறோம். நமது சுவாசமே நமக்கு சாவைக் கொண்டுவருமோ என்ற அச்சத்தில் ஓராண்டுக்கும் மேலாக வாழ்ந்துவருகிறோம்.

தூய ஆவியார் உயிர் மூச்சாக விளங்குகிறார் என்று கூறும் விவிலியச் சொற்கள், இன்று நாம் வாழும் சூழலில், நமக்கு உறுதியூட்டும் சொற்களாக விளங்கவேண்டும் என்று மன்றாடுவோம். தூய ஆவியாரின் வருகைப்பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் முக்கியப் பாடம் இதுதான்... அவர், வானிலிருந்து இறங்கிவந்து, சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள படைப்பு அனைத்திற்கும், உயிர் வழங்கும் மூச்சாக, எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்பது, இப்பெருவிழா பறைசாற்றும் பேருண்மை.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று, திருஅவை என்ற குழந்தை பிறந்தது. ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும், பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்தவிதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் ஆகியவற்றை, இப்பிறந்தநாளன்று நாம் சிந்திப்பது பயனளிக்கும்.

திருஅவை என்ற குழந்தை பிறந்தது, ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியார், காற்றாக, நெருப்பு நாவுகளாக, இறங்கிவந்த அனுபவம், தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலையுச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில், தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.

பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு, இறை அனுபவம் கிடைக்கும் என்று, ஏறத்தாழ, எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவத் திருமறையிலோ, தனி மனிதர்கள் அடையும் இத்தகைய அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போதும், ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதை, தூயஆவியாரின் வருகைப்பெருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இறைமக்கள் என்ற குடும்பமாக நாம் கூடிவர இயலாத நிலையை பெருந்தொற்று உருவாக்கியுள்ளது. இந்த பெருந்தொற்று நீங்கி, நாம் மீண்டும் இறைமக்களாக இணைந்துவரும் வேளையில், நாம் தனி தீவுகள் அல்ல, மாறாக, ஒருவரையொருவர் சார்ந்து வாழும் குடும்பம் என்ற உண்மையை, தூய ஆவியார், நம் அனைவருக்கும் உணர்த்தவேண்டும் என்று மன்றாடுவோம்.

தூய ஆவியாரின் வருகையினால் உருவாகும் அழகிய வாழ்வை, திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா, வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக கடந்துசெல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக தங்குவதற்கு, அந்த ஆவியார் வழங்கும் கனிகளை நாம் பெறவேண்டும். இக்கனிகளைப் பற்றி இன்றைய 2ம் வாசகத்தில், புனித பவுல் அடியார் கூறும் சொற்களுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25

தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2021, 15:52