தேடுதல்

Vatican News
காசாப் பகுதியில் இஸ்ரேல் அரசின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்த குழந்தை காசாப் பகுதியில் இஸ்ரேல் அரசின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்த குழந்தை  (AFP or licensors)

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் புதிதல்ல - பேராயர் பிட்ஸபல்லா

புனித பூமியில் அமைதி நிலவ இறைவேண்டல் செய்யும் ஒரு முயற்சியாக, மே 22, இச்சனிக்கிழமையன்று, புனித பூமியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருவிழிப்பு வழிபாடுகள் நடைபெறும் - முதுபெரும் தந்தை பிட்ஸபல்லா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் குழுவுக்கும் இடையே நிகழும் மோதல்கள், புதிது அல்ல என்றும், இதனால், மரணங்களும், கட்டடங்களின் அழிவுகளுமே நிகழும் என்றும் எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்ஸபல்லா (Pierbattista Pizzaballa) அவர்கள் கூறினார் என்று, ஆசிய செய்தி பதிவு செய்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் புதிது அல்ல என்றாலும், இம்முறை, இஸ்ரேல் நாட்டிற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும், அதன் விளைவாக எழுந்துள்ள பதட்ட நிலைகளும், அந்நாட்டில் வேரூன்றியிருக்கும் நெருக்கடி நிலையை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது என்று பேராயர் பிட்ஸபல்லா அவர்கள் கூறியுள்ளார்.

எருசலேம் நகரையும், யூத மதத்தையும் அடித்தளமாகக் கொண்டு, வெகு தீவிரமான வலது சாரி கட்சிகள் பயன்படுத்திவரும் கடுமையான வன்முறையான சொல்லாடல்கள், அச்சத்தை உருவாக்குகின்றன என்று, முதுபெரும் தந்தை பிட்ஸபல்லா அவர்கள், கவலையை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்துவரும் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படவும், புனித பூமியில் அமைதி நிலவவும் இறைவேண்டல் செய்யும் ஒரு முயற்சியாக, மே 22, இச்சனிக்கிழமையன்று, புனித பூமியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருவிழிப்பு வழிபாடுகள் நடைபெறும் என்று முதுபெரும் தந்தை பேராயர் பிட்ஸபல்லா அவர்கள் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் குழுவுக்கும் இடையே இதுவரை நிகழ்ந்துள்ள தாக்குதல்களில், ஹமாஸ் குழுவினர், இஸ்ரேல் பகுதியை நோக்கி செலுத்திய 3,750 ஏவுகணைத் தாக்குதல்களில், 90 விழுக்காட்டிற்கு மேல், இஸ்ரேல் அரசின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்துள்ளது என்றும், இதற்கு மாறாக, இஸ்ரேல் அரசு, காசாப் பகுதியில் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதல்கள் பெருமளவு அழிவுகளையும், உயிர்ப்பலிகளையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.

கடந்த 10 நாள்களாக நடைபெறும் இத்தாக்குதல்களால், 63 குழந்தைகள், 36 பெண்கள், 16 வயது முதிர்ந்தோர் உட்பட, 219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் 1,530க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

20 May 2021, 14:41