தேடுதல்

யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ 

மியான்மார் கர்தினால்: மக்களாட்சி வன்முறையால் பிறக்காது

பிரிவினை மற்றும், குழப்பத்தை உருவாக்கும் முரண்பாடுள்ள மொழியை அல்ல, மாறாக, ஒற்றுமையை உருவாக்கும், அன்பின் மொழியைப் பேசுவோம் - மியான்மார் கர்தினால் சார்லஸ் போ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரிவினை மற்றும், குழப்பத்தை உருவாக்கும் பாபேல் கோபுரத்தின் முரண்பாடுள்ள மொழியை அல்ல, மாறாக, ஒற்றுமையை உருவாக்கும், அன்பின் மொழியைப் பேசுவோம் என்று, மியான்மார் ஆயர் பேரவைத் தலைவரான, யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் அழைப்பு விடுத்தார்.

மே 23, தூய ஆவியார் வருகைப் பெருவிழாவன்று நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு உரைத்த கர்தினால் போ அவர்கள், மக்களாட்சி, வன்முறையால் பிறக்க முடியாது, மாறாக, அது அமைதியால் மட்டுமே இயலும், மற்றும், அதே மொழியைப் பேசுவதால் மட்டுமே, சனநாயக நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார்.

மியான்மாரில் சிலர் அமைதியை விரும்புகின்றனர், வேறு சிலர், இராணுவத்தோடு நேருக்குநேர் மோதுவதற்கு விரும்புகின்றனர், எனினும், சனநாயகத்தைக் கட்டியெழுப்புவது, பாபேல் கோபுரத்தைக் கட்டுவது போலன்று, மாறாக, நாம் எல்லாரும், அமைதி என்ற ஒரே மொழியைப் பேசவேண்டும் என்றும், கர்தினால் போ அவர்கள் கூறினார்.

மே 16, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், இத்தாலியில் வாழ்கின்ற மியான்மார் நாட்டு மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றியவேளை, அந்நாட்டினர் ஒற்றுமையில் நிலைத்திருந்து, அமைதியைக் கட்டியெழுப்புமாறு விண்ணிப்பித்ததைக் குறிப்பிட்ட கர்தினால் போ அவர்கள், பிரச்சனைகள் அமைதியான முறையில் தீர்க்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

எட்டு முக்கிய இனக்குழுக்கள், மற்றும், நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளோடு பலவண்ண கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் மியான்மார் மக்கள் மத்தியில் நிலவும் பிரவினைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள கர்தினால் போ அவர்கள், பல மொழிகளுக்கு மத்தியில், நம்பிக்கை, மற்றும், அன்பின் மொழி பேசப்படவேண்டும் என்றும், அனைவருக்கும், ஒரு பொதுவான இலக்கு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியன்று, மியான்மார் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மற்றும், அதில் இதுவரை 818 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், Karen, Kachin, Kayah போன்ற மியான்மாரின் பல்வேறு மாநிலங்களில், இராணுவத்திற்கும், தன்னாட்சி உரிமைக்காகப் போராடும் குழுக்களுக்கும் இடையே ஆயுதம் ஏந்திய தாக்குதல்கள் மீண்டும் வலுவடைந்துள்ளன.

இம்மோதல்களில் இடம்பெறும் குண்டுவெடிப்பால், Pekhon நகரின், திருஇதய கத்தோலிக்க ஆலயமும் தாக்கப்பட்டு, இருவர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. இச்சூழலில், கடந்த நான்கு மாதங்களாக, இராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும், மியான்மார் நாட்டின், தேசிய சனநாயக கட்சித்தலைவர் ஆங் சான் சூச்சி அவர்கள், மே 25, இச்செவ்வாயன்று முதன்முறையாக தனது சட்டக் குழுவோடு நீதிமன்றத்தில் முப்பது நிமிடங்கள் பேசியதற்குப் பின்னர், மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

25 May 2021, 15:32