தேடுதல்

கென்யாவில் மரம் நடுகின்றனர் கென்யாவில் மரம் நடுகின்றனர் 

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மனமாற்றம் தேவை

மனத்தளவில் மாற்றம் அடையாமல், மரங்களை மட்டும் நடுவதால் எவ்விதப் பயனும் இருக்காது - கென்யா நாட்டு ஆயர் Anyolo

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனத்தளவில் மாற்றம் அடையாமல், மரங்களை மட்டும் நடுவதால் எவ்விதப் பயனும் விளையப்போவதில்லை என்று, Laudato Sì ஆண்டு, மற்றும், Laudato Sì வாரத்தை நிறைவுசெய்து உரையாற்றிய, கென்யா நாட்டு திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அரசு, அரசு-சாரா அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, கென்யாவின் Kisumu காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்த மரம் நடும் நிகழ்வு ஒன்றில், மே 28, இவ்வெள்ளியன்று உரையாற்றிய, Kisumu ஆயர் Philip Arnold Anyolo அவர்கள், படைப்பைப் பாதுகாத்தல் என்பது, ஒரு பிறரன்புப் பணியாகும் என்று கூறினார்.

வருங்காலத் தலைமுறைகளுக்கு பாதுகாப்பான ஓர் இடத்தை விட்டுச்செல்லும் நோக்கத்தில், படைப்பைப் பாதுகாப்பதற்கு அக்கறை காட்டவேண்டும் என்று, நன்மனம் கொண்ட அனைவரையும் ஊக்குவிப்பதாக, கென்யா ஆயர் பேரவையின் தலைவரான, ஆயர் Anyolo அவர்கள் கூறியுள்ளார்.

கடவுளின் படைப்பு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுவரும் கத்தோலிக்கத் திருஅவையோடு, கென்யா அரசு தொடர்ந்து ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொண்ட ஆயர் Anyolo அவர்கள், இந்த Laudato Sì ஆண்டில், தனது உயர்மறைமாவட்டத்தின் புனித பவுல் Mbaga பங்குத்தளத்தில் மட்டும், ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன என்று அறிவித்தார்.

மேலும், நொபெல் அமைதி விருதுபெற்ற முதல் ஆப்ரிக்க பெண்மணியான, கென்யா நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் Wangari Maathai அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுமாறு, இந்நிகழ்வில் Nyeri பேராயர் Anthony Muheria அவர்கள் அழைப்பு விடுத்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2021, 15:02