தேடுதல்

Vatican News
எருசலேமில் வன்முறை எருசலேமில் வன்முறை  (AFP or licensors)

எருசலேம் வன்முறை, அந்நகரின் புனிதத்தை மீறுவதாக உள்ளது

எருசலேமில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொணர்வதற்கு, உலகளாவிய சமுதாயம், அனைத்து கிறிஸ்தவ சபைகள், நன்மனம்கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் - பேராயர் பிட்சபாலா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிழக்கு எருசலேம் பகுதியில் இடம்பெறும் வன்முறை, அமைதியின் ஊற்றாகிய எருசலேம் நகரின் புனிதத்துவத்தையும், மக்களின் புனிதத்துவத்தையும் மீறுவதாக உள்ளது என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை, பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள் கூறியுள்ளார்.

இஸ்ரேல் அரசு, கிழக்கு எருசலேமின் மாவட்டம் ஒன்றிலிருந்து பாலஸ்தீனியர்கள் பலரை வெளியேற்ற உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் இடம்பெறும் வன்முறைகள், மிகுந்த கவலையளித்துள்ளன என்று, பேராயர் பிட்சபாலா அவர்கள் கூறியுள்ளார்

al-Aqsa மசூதி மற்றும், Sheikh Jarrah பகுதியிலுள்ள பாலஸ்தீனியரின் இடங்களில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகள் குறித்து, தன் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் எழுதியுள்ள பேராயர் பிட்சபாலா அவர்கள், இஸ்ரேல் அரசு, பாகுபாட்டுடன் சட்டத்தைப் பயன்படுத்துவது, வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் சம உரிமை, சம மாண்பு மற்றும், சம கடமைகளோடு வரவேற்கும் இல்லமாக இருக்கவேண்டிய எருசலேம் நகரத்தின் புனிதம் காயப்படுத்தப்படுகின்றது என்றும், பேராயர் கவலை தெரிவித்துள்ளார்

எருசலேமில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொணர்வதற்கு, உலகளாவிய சமுதாயம், அனைத்து கிறிஸ்தவ சபைகள், நன்மனம்கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும், எருசலேமில் அமைதி நிலவ, தொடர்ந்து செபிக்கவேண்டுமெனவும், பேராயர் பிட்சபாலா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

எருசலேமில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, புனித பூமியின் அனைத்து கிறிஸ்தவ சபையினரும் கவலை தெரிவித்துள்ளதோடு, அவை நிறுத்தப்படுமாறு, தொடர்ந்து அழைப்பு விடுத்துவருகின்றனர். (AsiaNews)

11 May 2021, 15:05