தேடுதல்

Vatican News
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலைக்காக இயேசு சபையின் தலைமையகத்தில் போராட்டம் - கோப்புப் படம் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலைக்காக இயேசு சபையின் தலைமையகத்தில் போராட்டம் - கோப்புப் படம்   (Society of Jesus)

உடல்நலம் குன்றியுள்ள அருள்பணி ஸ்டான் சுவாமி

மும்பை டலோஜா சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 84வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், கோவிட் 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் - இயேசு சபையின் தலைமையகம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மும்பை டலோஜா சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 84வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், கோவிட் 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது என்று, உரோம் நகரில் உள்ள இயேசு சபையின் தலைமையகம் வெளிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மே 15, கடந்த சனிக்கிழமை முதல், குறிப்பாக, மே 18, இச்செவ்வாய் முதல், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் தொடர்பாக நிகழ்ந்துள்ள விவரங்களை, இயேசு சபை தலைமையகம், மே 19, இப்புதன் மாலையில் வெளியிட்டது.

அருள்பணி ஸ்டான் சுவாமியைக் குறித்த மருத்துவ அறிக்கையொன்றை, மே 15ம் தேதிக்குள் டலோஜா சிறை சமர்ப்பிக்கவேண்டும் என்று, மே 4ம் தேதி, மும்பை உயர்நீதி மன்றம், கூறியிருந்தும், அவ்வறிக்கையை சிறை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை.

தன் குறைகளைக் குறித்து ஒருபோதும் பெரிதுபடுத்தாத குணம் கொண்ட அருள்பணி ஸ்டான் அவர்கள், பெங்களூருவில் உள்ள இயேசு சபை அருள்பணி ஜோ சேவியர் அவர்களுடன், அண்மையில் மேற்கொண்ட தொலைப்பேசி அழைப்பில், தனக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு இருப்பதாகவும், உடலில் பெரும் சோர்வு இருப்பதாகவும் முதல்முறை கூறினார் என்று, அருள்பணி சேவியர் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

டலோஜா சிறையில் கோவிட் பெருந்தொற்று பரவியிருக்கும் நிலையில், அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியரான முனைவர் Hany Babu அவர்கள், கோவிட் பெருந்தொற்று காரணமாக, மும்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மே 18, இச்செவ்வாயன்று, அருள்பணி ஸ்டான் அவர்களுக்கும், இன்னும் சில சிறைக் கைதிகளுக்கும், கோவிட் கிருமி குறித்த சோதனைகள் ஏதும் நடத்தப்படாமல், கோவிட் தடுப்பூசிகள் அவசர, அவசரமாக வழங்கப்பட்டன என்று, இயேசு சபை தலைமையகத்தின் அறிக்கை கூறுகிறது.

உடல்நலம் குன்றிய நிலையில், இச்செவ்வாய் மாலையில், அருள்பணி ஸ்டான் அவர்கள், மும்பையில் உள்ள Jamshedjee Jeejeebhoy மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்றும், மீண்டும் அவர் டலோஜா சிறைக்கு கொண்டுவரப்பட்டார் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

இந்நிலையில், JJ மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர்கள், அருள்பணி ஸ்டான் அவர்களின் உடல்நிலையைக் குறித்த ஒரு முழுமையான அறிக்கையை, மே 21, இவ்வெள்ளி காலை 11 மணிக்குள் மும்பை உயர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனைவர் Hany Babu அவர்கள், உயர் நீதி மன்றத்தில், அவரது குடும்பத்தினர் விடுத்த விண்ணப்பத்தின் பேரில், மும்பையின் Bridge Candy மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும், அங்கு கோவிட் பெருந்தொற்றுக்கென மேற்கொள்ளப்படும் மருத்துவச் செலவை, Hany Babu அவர்கள் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. (SJCuria/ AsiaNews)

20 May 2021, 14:55