தேடுதல்

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி  

அருள்பணி சுவாமி: மருத்துவமனையைவிட, சிறையே மேல்

மும்பை JJ அரசு மருத்துவமனையில் மூன்றுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளேன். அங்குள்ள நிலைமை எனக்கு நன்றாகவே தெரியும். எனவே டலோஜா சிறையே பரவாயில்லை - அருள்பணி ஸ்டான் சுவாமி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதியிலிருந்து மும்பை டலோஜா சிறையில், வைக்கப்பட்டிருக்கும், 84 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், சிறையில் தனது உடல்நிலை மோசமடைந்து வருகிறதென்று, மும்பை உயர்நீதி மன்றத்தில் கூறியுள்ளார்.

மே 19, இப்புதனன்று, ஒளிவலைக்காட்சி வழியாக, நீதிமன்றத்திடம் தன் உடல்நிலை பற்றி விவரித்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், சிறைக்கு வரும்போது தனது உடல்நிலை ஓரளவு நல்ல நிலையில் இருந்தது என்றும், சிறையிலிருக்கும் ஏழு மாதங்களுக்கு மேற்பட்ட இக்காலக்கட்டத்தில், உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றதென்றும் விளக்கிக் கூறினார்.

சிறையில் வைக்கப்படுவதற்குமுன், நானாக உணவு உண்ண, குளிக்க, ஏதாவது எழுத என்ற நிலை இருந்தது, ஆனால் இவையெல்லாம் மறைந்து, தற்போது, யாராவது ஒருவர் எனக்கு உணவு ஊட்டுகின்றார், மேலும், நானாக எழுதவோ, அல்லது நடக்கவோ முடியாத சூழலுக்கு, டலோஜா சிறை என்னை வைத்துள்ளது, இவையனைத்தையும் கருத்தில் வைத்து, எனக்கு பிணையல் வழங்குமாறு கேட்கிறேன் என்று, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

தனது உடல்நிலை காரணமாக, தனக்கு இடைக்கால பிணையல் வழங்கப்படவும், இராஞ்சியில் தன் இல்லத்தில் இருக்கவும், அனுமதி கேட்பதாக, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் கூறியவேளை, மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு, மும்பையில், அரசு அல்லது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க முன்வந்துள்ளது.

மும்பை JJ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், அந்த மருத்துவமனையில் மூன்று முறை அனுமதிக்கப்பட்டுள்ளேன், அங்குள்ள நிலைமை எனக்கு நன்றாகவே தெரியும், எனவே, எனது உடல்நிலை மோசமடைந்து வந்தாலும் பரவாயில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைவிட, சிறையிலேயே இறப்பது மேல் என்று  தெரிவித்துள்ளார்.

மும்பை உயர்நீதிமன்றம், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, பிணையல் வழங்குவது குறித்த விசாரணையை, வரும் ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளது. 

இதற்கிடையே, 84 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கோவிட் 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது என்று, உரோம் நகரில் உள்ள இயேசு சபையின் தலைமையகம், அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (UCAN)

22 May 2021, 16:10