தேடுதல்

Vatican News
இந்தியாவில் கோவிட் 19 இந்தியாவில் கோவிட் 19   (AFP or licensors)

இந்தியத் திருஅவை கோவிட்-19 நோயாளிகளுக்கு புதிய திட்டம்

இந்தியாவில் முதலில் ஏழு மாநிலங்களில் தலத்திருஅவையால் துவக்கப்பட்ட பெருந்தொற்று நோயாளர் பராமரிப்பு நடவடிக்கை, தற்போது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், அனைத்து மறைமாவட்டங்களிலும், பங்குத்தள அடிப்படையில், கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளைப் பராமரிப்பதற்கு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று, இந்திய ஆயர் பேரவையின் நலவாழ்வு பணிக்குழுவின் தலைவர், பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள் அறிவித்துள்ளார்.

மே 13, இவ்வியாழனன்று துவக்கப்பட்டுள்ள இந்த புதிய நடவடிக்கை பற்றி, யூக்கா செய்தியிடம் தெரிவித்த, விசாகப்பட்டினம் பேராயர் மல்லவரப்பு அவர்கள், இப்புதிய நடவடிக்கை, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறைவைத் தவிர்க்கவும், மருத்துவப்பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் உதவும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, தெலுங்கானா கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில், பங்குத்தளங்களை அடிப்படையாக வைத்து துவக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை வழியாக, பெருந்தொற்று நோயாளிகளுக்கு, அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சை அளிப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது என்றும், பேராயர் மல்லவரப்பு அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், இந்திய ஆயர் பேரவையின் நலவாழ்வு பணிக்குழுவின் பொதுச்செயலர் அருள்பணி ஜூலியஸ் அரக்கல் அவர்கள் கூறுகையில், இப்பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள, மற்றும், உதவிகள் அதிகம் தேவைப்படும் குடும்பங்களை, அவர்கள் பகுதியிலுள்ள பங்குத்தளங்கள் கண்டுபிடித்து, உதவிகள் ஆற்றும் என்று கூறியுள்ளார்.

இந்நடவடிக்கை, பெருந்தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம், மற்றும், நோய்தொற்றுக்களைக் குறைக்கும் என்றும் கூறிய அருள்பணி அரக்கல் அவர்கள், முதலில் ஏழு மாநிலங்களில் துவக்கப்பட்ட இந்நடவடிக்கை, தற்போது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த பணிக்குழு, மறைமாவட்டங்களில் நாற்பது அலுவலகங்களைக் கொண்டிருக்கின்றது என்றும் எடுத்தியம்பினார்.

இந்த நடவடிக்கைக்கென, அந்தந்த இடங்களில், தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து, பெருந்தொற்று நோயாளிகளுக்கு, முதலுதவி சிகிச்சைகள் வழங்க பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், தன்னார்வலர்கள், நோயாளிகளோடு, தொலைப்பேசியில் தொடர்ந்து தொடர்புகொள்ள வழியமைக்கப்படும் என்றும், அருள்பணி அரக்கல் அவர்கள் கூறினார். (UCAN)

14 May 2021, 16:38